Corona Virus

அலட்சியப்படுத்திய சுகாதாரத்துறை - அடக்கம் செய்யப்பட்ட பின்னர் கொரோனா பரிசோதனை முடிவு வந்ததால் அதிர்ச்சி!

சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு முதியவர் உயிரிழந்து அடக்கமும் செய்யப்பட்ட பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலட்சியப்படுத்திய சுகாதாரத்துறை - அடக்கம் செய்யப்பட்ட பின்னர் கொரோனா பரிசோதனை முடிவு வந்ததால் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முதலிடத்தில் இருக்கிறது சென்னை. மத்திய அரசு அறிவித்துள்ள ஹாட்ஸ்பாட் பட்டியலிலும் சென்னை உள்ளது. சென்னையில் இதுவரை 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு முதியவர் உயிரிழந்து அடக்கமும் செய்யப்பட்டு 2 நாட்கள் கழித்து அவரது மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை வேதகிரி தெருவில் வசித்து வந்த 55 வயது நபர் டெல்லி சென்று வந்த நிலையில் அரசின் வேண்டுகோளை அடுத்து தன்னை சிகிச்சைக்கு உட்படுத்திக்கொண்டார். கடந்த 1-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொற்று இல்லை எனத் தெரிந்து வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தி 9-ம் தேதி அனுப்பி வைத்துள்ளனர்.

அவரது வீட்டிலுள்ளவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு சோதனை எதுவும் நடத்தவில்லை. இதனால் 55 வயது நபருடைய தந்தையான 95 வயது முதியவர் கடந்த 13-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

முதியவரை அவரது மகன் அருகிலேயே இருக்கும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சளி மாதிரியை எடுத்துவிட்டு வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

அலட்சியப்படுத்திய சுகாதாரத்துறை - அடக்கம் செய்யப்பட்ட பின்னர் கொரோனா பரிசோதனை முடிவு வந்ததால் அதிர்ச்சி!

இந்நிலையில் வீட்டிலிருந்த முதியவருக்கு மறுநாள் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்படவே மீண்டும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கும் அனுமதிக்காமல், அங்கிருந்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுசென்று அங்கும் அனுமதிக்காமல் மீண்டும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சில உறவினர்களுடன் சென்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் 2 நாட்கள் கழித்து முதியவரின் மாதிரி ஆய்வு முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். முதியவர் உயிரிழந்து அடக்கமும் முடிந்துவிட்டது என்ற தகவலால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர் வசித்த தெரு முழுதும் சீல் வைத்துள்ளனர்.

உயிரிழந்த முதியவரின் மகன், பேரன் இருவரையும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும்,

முதியவர் உடலை ஆம்புலன்ஸில் கொண்டு சென்ற ஓட்டுனர், உதவியாளர் , உடன் மயானத்துக்குச் சென்ற உறவினர்களை தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories