சீனாவில் உருவான கொரோனா வைரஸ் நோய் தற்போது உலகின் 180க்கும் மேலான நாடுகளையும், அவற்றின் பொருளாதாரத்தையும் பாதித்து கிலியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் ஆதியே ஆட்டம் கண்டுள்ளது. அங்கு மட்டும் இதுவரையில் கொரோனா காரணமாக லட்சக் கணக்கான மக்கள் வேலையை இழந்துள்ளனர். அந்த வேலையிழப்பு எண்ணிக்கை மேலும் தொடரும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன.
இதில் வளரும் நாடுகளின் பொருளாதார கதியோ எத்திசையில் இருக்கிறது என்ற நிலையில் உள்ளது. சர்வதேச மருத்துவ அவசர நிலை என்பதால் ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச ஆணையங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதோ, ஊதியம் குறைப்பு செய்வதோ கூடாது என தெரிவித்துள்ளது.
இருப்பினும், தொழில்துறை நிறுவனங்களுக்கு லாபம் என ஏதும் கிட்டாத காரணத்தால் அதனால் ஆட்குறைப்பை தவிர்க்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு மேலான்மை ஆலோசனை நிறுவனமான கேப் ஜெமினி (CAP GEMINI) தனது ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை அறிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம், கிளவுட் சர்வர், டிஜிட்டல் என பல தொழில் முறை சேவைகளில் கேப் ஜெமினி ஈடுபட்டு வருகிறது. சுமார் 40 நாடுகளில் கிளை பரப்பியுள்ள கேப் ஜெமினி நிறுவனத்தில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். அதில் இந்தியர்கள் மட்டுமே 1.2 லட்சம் பேர் உள்ளனர்.
இந்த 1.2 லட்சம் பேரில் 84 ஆயிரம் பேருக்கு ஒற்றை இலக்கில் பதவி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாகவும், இதர ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் கேப் ஜெமினி தெரிவித்துள்ளது.
இதுபோக, இந்திய ஊழியர்களின் குடும்பத்தினருக்கு அவசர மருத்துவ உதவிகளுக்காக சுமார் 24 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்வின் யார்டி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உலக அளவில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதோடு, கேப் ஜெமினி நிறுவனத்தின் செயலுக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.