கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகம் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில், சில மாநிலங்களில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று காலை 10 மணியளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். அதில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கொரோனா தொடர்பாக 3 முறை உரையாற்றிய அவர், கொரோனா நோயாளிகளுக்கு தன்னலம் பாராமல் சேவையாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கைத்தட்டவும், விளக்கு ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால், அவரது அபிமானிகளும், விசுவாசிகளும், ஒருபடி மேல் சென்று வீதியில் இறங்கி கொண்டாட்டத்தையே வெளிப்படுத்தினர். இது கொரோனா பரவலுக்கு எதிரான தனிமனித இடைவெளியை கேள்விக் குறியாக்கியதோடு பலருக்கு முகச்சுழிப்பையுமே ஏற்படுத்தியது.
அவ்வாறு செய்துமே மருத்துவர்களுக்கான எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமே வழங்கப்படாமலே அவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு பணியாற்றியதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக அரசின் தலைமைச் செயலாளரோ, மருத்துவர்கள் அலட்சியமாக நோயாளிகளை கையாண்ட விதத்தாலேயே இவ்வாறு தொற்று ஏற்பட்டிருக்கிறது என போகிற போக்கில் பேசிச் சென்றிருக்கிறார். உண்மையில், அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் இந்த நிலை ஏன் எழப்போகிறது என மருத்துவர்கள் தரப்பில் கண்டனங்களும், கேள்விகளும் எழுந்துள்ளது.
இந்நிலையில், கோவை மருத்துவ கவுன்சிலுக்கு, கொரோனா நோயாளிகளை கவனித்து வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதம் ஒன்று மனதை உருக வைக்கும் வகையில் உள்ளது.
அதில், “கொரோனா தனிமை வார்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் உணவும், தண்ணீரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு பகல் பாராமல் பணியாற்றும் தங்களுக்கு உரிய நேரத்தில் உணவையும் தண்ணீரையும் அளிப்பதற்கு போர்க்கால அடிப்படையில் வழி வகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் உயிரிழந்த மருத்துவர் ஒருவரின் உடலை தகனம் செய்ய சென்னையை அடுத்த அம்பத்தூரில் மக்கள் அனுமதிக்காத கொடூரம் நடந்தேறியது. தற்போது, எவ்வித சுணக்கமும் இல்லாமல் நோயாளிகளை பார்த்துக்கொள்ளும் மருத்துவர்களுக்கு உணவும், தண்ணீரும் கூட கொடுக்காத அவல நிலையை ஏற்படுத்ததான் கைத்தட்டல்களை வாரி இரைத்தார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.