கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, மார்ச் 25ம் தேதி நள்ளிரவு முதல் இன்று வரை 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கை மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியா நாளுக்கு நாள் கொரோனா தடுப்பில் முன்னேற்றம் கண்டு வருகிறது. இது பலருக்கும் மிகவும் கடினமான காலம் என்பதை நாம் உணர்ந்து இருக்கிறோம்.
நம்மை பாதுகாத்துக்கொள்வதில் சில நேரங்களில் தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.
உணவு கிடைப்பதில் சிக்கல், குடும்பத்தை பிரிந்து இருப்பதால் வருத்தம் போன்றவை தொடர்ந்து நிகழ்ந்துவருவதாக தகவல்கள் வருகிறது. அனைத்தையும் இந்த அரசு சரியாக கையாண்டு வருகிறது. இன்று தாதாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாள் உங்கள் அனைவரின் சார்பாகவும் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
தமிழ் மக்களும் தமிழ்புத்தாண்டை வீட்டில் இருந்தே கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் கொரோனா தடுப்பு போரில் இந்தியா மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
சரியான சமயத்தில் இந்தியா சரியான முடிவுகளை எடுத்ததனால், மிகப்பெரிய சேதாரத்தை நாம் தவிர்த்துள்ளோம். 21 நாட்கள் ஊரடங்கு இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. இதை உலக நாடுகள் வியந்து பார்கின்றன.
வைரஸை கட்டுப்படுத்துவதில் நாட்டு மக்கள் ராணுவ வீரர்களை போன்று செயல்படுகின்றனர்
கொரோனா தடுப்பின் அடுத்த கட்டமாக ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ஊரடங்கை நீட்டிப்பது அவசியமாகிறது. இது பலருக்கும் கடினமான ஒன்றாக இருந்தாலும், நமக்காக, நமது நாட்டுக்காக இதை செய்ய வேண்டி உள்ளது.
இனி வரும் நாட்களிலும் மக்கள் அனைத்து விதிகளையும் கடைபிடிக்க வேண்டும். ஏப்ரல் 20 வரை மிகவும் கண்டிப்புடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் தான் இனியும் வைரஸ் பரவலை தடுக்க முடியும்.
ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் சில நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.
ஊரடங்கு உத்தரவின் நீட்டிப்பு குறித்து முறையான விதிமுறைகள் அடங்கிய விரிவான கையேடு நாளை வெளியிடப்படும். கட்டுப்பாட்டை மீறினால், தளர்வு ரத்து செய்யப்பட்டு மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என பேசியுள்ளார்.