தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது. மாநில அளவில் 1,173 பேர் பாதிக்கப்பட்டு நிலையில் சென்னையில் மட்டும் 205 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் பன்மடங்கு உயரும் வாய்ப்பு இருப்பதால், அரசு மற்றும் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் (Trade Center) 500 படுக்கைகளுடன் கொண்ட சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 80 பகுதிகள் முடக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு 5 முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் ஐ.ஐ.டி போன்ற கல்லூரிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வர்த்தக மையம் போன்ற இடங்களில் 10 ஆயிரம் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண காய்ச்சல், இருமல் உடையவர்கள் பரிசோதனைக்குப் பின் வீட்டிற்கு அனுப்பப்படாமல் இங்கு தனிமைப்படுத்தப்படுவர்.
கூடுதல் தேவை ஏற்பட்டால் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கம், ராகவேந்திரா மண்டபம் போன்ற தனியார் இடங்கள் பயன்படுத்தப்படும். சென்னையில் முடக்கப்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 30 -ம் தேதிக்குள் 40 ஆயிரம் பேரிடம் இருந்து மாதிரிகள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள 35 மையங்களில் நேற்று வரை 600 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயின் தாக்கம் குறித்து அறிந்து சிகிச்சையை துரிதப்படுத்த முடியும்
வெளியே செல்லும்போது முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்கிற உத்தரவு பல்வேறு மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளது. ஆகவே, மக்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக் கவசம் அல்லது கைக்குட்டை மூலம் தயாரிக்கப்பட்ட முகக் கவசம்கூட அணியலாம்.” எனக் கூறியுள்ளார்.
இப்படி இருக்கையில், தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட, மக்கள் அதிகம் உள்ள சென்னையில் கொரோனாவின் பரவல் சமூக அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதா என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது. அப்படியெனில், அரசு மிகத்தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.