தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்று வரை கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,173 ஆக இருந்த நிலையில் இன்று 1, 204 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் சுகாதரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ். அப்போது அவர் தெரிவித்ததாவது :
“தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 15 ஆண்கள் 16 பெண்கள். இவர்கள் வீட்டுக் கண்காணிப்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,204 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒருவர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதால், மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 10 வயதிற்கு உட்பட்ட 33 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 81 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளவர்கள் 28,711. அரசுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் 135. 28 நாட்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 68,519.
இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 19,255. இதுவரை சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை -15,502. நேற்று ஒரே நாளில் 6,509 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.
இன்று பாதிக்கப்பட்டோரின் விவரம் மாவட்ட வாரியாக :
திண்டுக்கல் - 9
சென்னை - 5
தஞ்சாவூர் - 4
தென்காசி - 3
மதுரை - 2
ராமநாதபுரம் - 2
நாகப்பட்டினம் - 2
கடலூர் - 1
சேலம் - 1
சிவகங்கை - 1
கன்னியாகுமரி - 1