கொரோனா தொற்று தனிமைப்படுத்தும் மையத்திற்காக குடிசை மாற்று வாரியத்தால் கே.பி பார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பயன்படுத்தப்போவதாக அரசு முடிவெடுத்துள்ளது. மிக அடர்த்தியாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் தனிமைப்படுத்தும் மையத்தை உருவாக்குவது நோய்தொற்றை அதிகப்படுத்தவே வழிவகுக்கும் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ( CPI-M) மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா அறிக்கை விடுத்துள்ளார்.
அதில், “கொரோனா தொற்று தனிமைப்படுத்தும் மையத்திற்காக குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பயன்படுத்தப்போவதாக தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கே.பி பார்க் பகுதியிலுள்ள 864 குடியிருப்புகளையும் அத்திட்டத்தின் கீழ் அறிவித்துள்ளனர்.
கே.பி பார்க் அடுக்குமாடி குடியிருப்புகள் ஏற்கனவே அங்கு வசித்த மக்களுக்காக கட்டப்பட்டதாகும். கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டபோதும் சம்மந்தப்பட்ட மக்களுக்கு ஒப்படைக்கப்படவில்லை. அப்புதிய குடியிருப்பில் குடியேற வேண்டிய மக்களோ எவ்விதமான அடிப்படை வசதிகளுமின்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிசை மாற்று வாரியத்தால் தகரக் கொட்டகை அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து முறையிட்டபோதும் பல்வேறு காரணங்களை சொல்லி தட்டிக்கழித்து வந்தனர்.
கொரோனா தொற்று பரவும் அபாயமுள்ள இச்சூழலில் எவ்வித சுகாதார வசதியுமின்றி கே.பி பார்க் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை ஏற்கனவே அறிவித்தபடி அந்தந்த பயனாளிகளுக்கு கொடுப்பதே அரசின் முதற்பணியாக இருந்திருக்க வேண்டும்.
அதைவிடுத்து கொரோனா தொற்று தடுக்கும் மையத்தை கே.பி பார்க் குடியிருப்பில் மிக அடர்த்தியாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் உருவாக்குவது நோய்தொற்றை அதிகப்படுத்தவே வழிவகுக்கும்.
எனவே, தமிழக அரசு இனியும் காலந்தாழ்த்தாமல் கே.பி பார்க்கில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை அடிப்படைவசதிகளும் சுகாதார வசதிகளுமின்றி தவித்துக்கொண்டிருக்கும் உரிய பயனாளிகளுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.