தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதன் விவரம் பின்வருமாறு :
“தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்து 746 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 850 ஆக உள்ளது. அரசுக் கண்காணிப்பில் 136 பேர் உள்ளனர்.
இன்று கொரோனா உறுதிப்படுத்தப்பட்டவர்களில் மூவர் மருத்துவர்கள், நால்வர் மருத்துவப் பணியாளர்கள். 10 வயதுக்கு உட்பட்ட 31 பேர் தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 1,104 பேருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உள்ளது. இன்று மட்டும் 8 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கின்றனர். விரைவில் கொரோனா சோதனை நடத்தப்படுவதற்காக ரேபிட் டெஸ்ட் கருவிகள் ஓரிரு நாளில் தமிழகத்துக்கு வந்து சேரும்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வருவதற்கு முன்பே 1.5 கோடி மூன்றடுக்கு மாஸ்க்குகள் ஆர்டர் செய்யப்பட்டது. கையிருப்பாக 65 லட்சம் மூன்றடுக்கு மாஸ்க்குகள், N95 உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் உள்ளன.
சென்னை, வேலூர், கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நோய் பரவுவதற்கான காரணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.” என பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.