தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
நேற்றைய நிலவரப்படி 969 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. 1075 பேர் என்ற பாதிப்பு எண்ணிக்கையுடன் நாடளவில் 2வது இடத்தில் தமிழகம் உள்ளது.
கடந்த 5 நாட்களில் இன்றைய உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. மேலும், தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் தலா 4 பேருக்கும், 5 செவிலியர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளுக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் தெரிவித்ததாக பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.
இன்று ஒருவர் உட்பட மொத்தம் 11 பேர் தமிழகத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அரசு கண்காணிப்பில் 162 பேரும், வீட்டுக் கண்காணிப்பில் 39 ஆயிரத்து 41 பேர் உள்ளதாகவும் தெரிவித்தார்.
10,655 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 813 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து பேசிய பீலா ராஜேஷ், தமிழக அரசு தீவிரமான பரிசோதனைகளை மேற்கொள்ளப்போவதாகவும், வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களுக்கு சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்கவும் முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.