ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு குறைந்தது பதினைந்தாயிரம் ரூபாய் வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க உறுப்பினர் தயாநிதிமாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை பாரிமுனையில் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபுவின் அலுவலகத்தில் அவருடன் இணைந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தயாநிதி மாறன். ரயில் நிலையங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 120 பேருக்கு 18 மளிகை பொருட்கள் மற்றும் உதவித்தொகையை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் தயாநிதி மாறன் பேசினார்.
அப்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தங்களுடைய சொந்த செலவில் கொரோனா கால நிவாரண உதவிகளை மக்களுக்கு செய்து வருவதாகக் கூறினார்.
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது கொரோனாவை தடுக்க நல்ல வழி எனக் கூறிய அவர், அதே சமயத்தில் தினக்கூலியை நம்பி வாழ்க்கை நடத்தும் அடித்தட்டு மக்களுக்கு பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை உதவியாக வழங்க, மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.
கொரோனா பரிசோதனை செய்ய 13,000 உபகரணங்கள் மட்டுமே இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய அவர், ஒன்றரை கோடி மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகருக்கு அது போதாது எனத் தெரிவித்தார்.
ஆகையால், நோய்த் தொற்றை கண்டறிதல் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும். மத்திய அரசும் மாநில அரசும் வெளிப்படைத்தன்மையுடன் கொரொனா வைரஸ் தொற்றுக்காண அடுத்த கட்ட நகர்வை திட்டமிட்டு தெளிவோடு அணுக வேண்டும் என தயாநிதி மாறன் கேட்டுக் கொண்டார்.