கொரோனா வைரஸ் புதிதல்ல; கோவிட் 19 வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஏன் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை? காரணம் சந்தை.
எல்லாவற்றையும் சந்தையே தீர்மானிக்குமென்றால் நாம் சாக வேண்டியதுதான். கொரோனாவை தடுத்திருக்க முடியும். ஆனால், சந்தை வேறு திசையில் பயணித்ததுதான் இப்போது ஏற்பட்டிருக்கும் பேரழிவுக்குக் காரணம் என்கிறார் நோம் சாம்ஸ்கி.
மொழியியல் வல்லுநர், எழுத்தாளர், அரசியல் தத்துவவாதி என பன்முகத் தன்மை கொண்டவர் நோம் சாம்ஸ்கி. கொரோனா பாதிப்பு மற்றும் உலக நாடுகள் தொடர்பாக அல்ஜசீராவில் ”நோம் சாம்ஸ்கி: கொரோனா வைரஸை பெருந்தொற்றை தடுத்திருக்க முடியும்” (Noam Chomsky: 'Coronavirus pandemic could have been prevented) என்ற தலைப்பில் இவருடைய கட்டுரை வெளியாகியுள்ளது.
அதில் அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுத்திருக்க முடியும். அந்த வைரஸ் குறித்த போதுமான தகவல்கள் முன்பே கிடைத்தன என்கிறார் அமெரிக்கத் தத்துவ அறிஞர் நோம் சாம்ஸ்கி. இந்த பெருந்தொற்று ஒரு முடிவுக்கு வந்தாலும், அணுஆயுத போர் மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகிய சிக்கலான சாவல்கள் அப்படியே இருக்கும் என்கிறார்.
முன்பே எச்சரிக்கப்பட்டது
சாம்ஸ்கி, “இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றை முன்னதாகவே தடுத்திருக்க முடியும். இதனை தடுப்பதற்க்குரிய போதுமான தகவல்கள் கிடைத்துவிட்டன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இது போன்ற ஒரு பெருந்தொற்று அமெரிக்காவில் பரவுவதற்குரிய சாத்திய கூறுகள் இருப்பதாக அக்டோபர் 2019 ஆண்டே எச்சரிக்கப்பட்டது,” என்கிறார்.
சுகாதார பாதுகாப்பிற்கான ஜான்ஸ் ஹாஃப்கினஸ் மையம், உலக பொருளாதார மன்றம் மற்றும் பில் கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய நிகழ்வில் இது குறித்து எச்சரிக்கப்பட்டது. இதனை மேற்கோள் காட்டியே சாம்ஸ்கி இவ்வாறாக கூறுகிறார்.
“ஆனால் எதுவுமே நடக்கவில்லை. இந்த தகவல்களில் யாரும் கவனம் செலுத்தவில்லை. அரசியல் அமைப்புகளின் துரோகத்தாலே இந்த பெருந்தொற்று மோசமான சிக்கலாக மாறியது,” என்கிறார்.
அவர், “டிசம்பர் 31 ஆம் தேதியே, உலக சுகாதார நிறுவனத்திடம் சீனா இது குறித்து கூறி இருக்கிறது. அதாவது நிமோனியா போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாக தகவல் தந்திருக்கிறது. அவர்கள் தகவல் கொடுத்த ஒரு வாரத்திற்கு பின்பு கொரோனா வைரஸை சீனா அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது குறித்த விரிவான தகவல்களை உலகத்திடம் அவர்கள் அப்போதே அளித்துவிட்டார்கள். அதன் பின்பு சிலர் இது குறித்து நடவடிக்கை எடுத்தார்கள்,” என்று தெரிவிக்கிறார்.
சீனா, தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் சில விஷயங்களை முன்னெடுத்தார்கள். அங்கு ஓரளவாவது முதலில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது என்கிறார். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் மேற்குலக நாடுகள் வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்றின.
“ஐரோப்பாவில் முதலில் ஜெர்மனி சில நடவடிக்கைகளை எடுத்தது. வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என மக்களை பரிசோதனை செய்தது. பிறருக்கு உதவாமல் அவர்கள் சுயநலமாக நடந்து கொண்டாலும், குறைந்தபட்சம் அவர்கள் நாட்டில் பரவாமல இருக்க நடவடிக்கைகளை எடுத்தனர்,” என்று குறிப்பிடும் அவர் மற்ற நாடுகள் இதனை புறக்கணித்தன என்கிறார். குறிப்பாக பிரிட்டனும், மிக மோசமாக அமெரிக்காவும் இதனை கையாண்டன என்று தெரிவிக்கிறார்.
“டொனால்ட் ட்ரம்ப் ஒரு நாள், ‘கொரோனா பெரும் சிக்கலே இல்லை. இது வெறும் காய்ச்சல்தான்’ என்பார். அடுத்தநாள் 'இந்த தொற்றானது பயங்கரமான நெருக்கடி. இது குறித்து அனைத்தும் எனக்கு தெரியும்’ என்பார். அதற்கு அடுத்தநாளே, ‘நாம் நம் பணிக்கு திரும்ப வேண்டும். ஏனெனில் நான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்’ என்பார். இந்த உலகம் கொரோனாவை கையாண்ட விதம் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.” என்கிறார்.
உலகத்திலே கொரோனா தொற்றால் அமெரிக்கர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 4 லட்சம் பேர் அங்கு பாதிக்கபட்டுள்ளன்ர். நியூயார்க் மாகாணத்தில் மட்டுமே 4 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 180 நாடுகளில் பரவிவுள்ள இந்த வைரஸால் 14 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
‘சோஷியோபாதிக் பஃபூன்’
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சோஷியோபதிக் பஃபூன் என்று விவரிக்கும் சாம்ஸ்கி, “மனிதகுல வரலாற்றில் முன்பு எப்போதும் நடக்காத பேரழிவின் விளிம்பை நோக்கி செல்கிறோம். பள்ளத்தை நோக்கிய பந்தயத்திற்கு ட்ரம்பும் அவரது கூட்டாளிகளும் தலைமை தாங்கி உள்ளனர். வேறு ஒரு அச்சுறுத்தலையும் நாம் சந்திக்கிறோம். அணு ஆயுத போர் குறித்த அச்சுறுத்தல் ஒன்று. மற்றொன்று புவி வெப்பமயமாதல்.”
“கொரோனா வைரஸ் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இருந்த போதிலும் அதிலிருந்து நாம் மீண்டுவிட முடியும். ஆனால், அடுத்த இரண்டு அச்சுறுத்தல்களிலிருந்து மீளவே முடியாது. அழிவு மட்டுமே நிகழும்” என இரான் மீதான பொருளாதார தடைகளை கடுமையாக சாடுகிறார் சாம்ஸ்கி.
“அழிவை ஏற்படுத்தும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதிக்கும் போது. ஆம் அமெரிக்கா மட்டுமே அப்படியான தடைகளை பிற நாடுகள் மீது விதிக்கிறது… பிற நாடுகள் தங்கள் எஜமானரை பின்பற்றுகிறார்கள். பின் பற்ற மறுத்தால் இந்த பொருளாதார அமைப்பிலிருந்து உதைத்து வெளியே தள்ளப்படுகிறார்,” என்கிறார்.
கொரோனா வைரஸால் ஏற்பட்ட நன்மை
“கொரோனா வைரஸால் ஏற்பட்ட ஒரே நன்மை என்னவென்றால், எதுமாதிரியான உலகம் நமக்கு தேவை என மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது இந்த வைரஸ்,” என்கிறார்.
“இந்த நெருக்கடியின் தோற்றுவாய் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். ஏன் கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்பட்டது என நாம் யோசிக்க வேண்டும். இது சந்தையின் மகத்தான தோல்வி. இதன் தாக்கம் சந்தையில் ஏற்கனவே கண்மூடித்தனமான இந்த நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளால் சிதைக்கப்பட்ட சமூக பொருளாதாரத்தில் எதிரொலிக்கும்,” என்கிறார்.
சந்தையே தீர்மானிக்குமென்றால் இதுதான் நிகழும்
“பெருந்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எப்போதும் இருந்திருக்கிறது. ஆனால், அதை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த சார்ஸ் பரவி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பின்னும் கொரோனா பரவுவதற்கான அச்சுற்றுதல் இருந்தது. அதன் பின்னாவது கொரோனா பெருந்தொற்றுக்கான மருந்துகளை கண்டுபிடிப்பதில் நேரத்தை செலவிட்டிருக்கலாம்.
ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை? சந்தை கோரவில்லை. சந்தை தவறான சமிக்ஞைகளை காட்டியது. நாம் நமக்கான மருந்து தயாரிக்கும் பணிகளை தனியார் பெரும் நிறுவனங்களிடம் அளித்துவிட்டோம். அவர்கள் சருமத்திற்கான க்ரீம்களை தயாரிக்க நேரம் செலவிட்டார்கள். மக்களை கொல்லும் பெரும் தொற்றுக்கு மருந்து தயாரிப்பதைவிட, சரும பொலிவுக்கான க்ரீம் தயாரிப்பதுதான் அதிக லாபம் தரக்கூடியது என கருதினார்கள். அதனால்தான் நாம் இப்போது இந்த இடத்தில் நிற்கிறோம்,” என்றார்.
போலியோவுக்கான சொட்டுமருந்தை கோடிட்டு பேசிய அவர், “பொலியோ பெரும்வாரியான மக்களுக்கு அமெரிக்காவில் ஏற்பட்ட போது, அதற்கான மருந்தை கண்டுபிடித்தது அமெரிக்க அரசு நிறுவனம். 1950களில் அதற்கான தடுப்பு மருந்து கிடைத்தது. அதற்காக எந்த காப்புரிமையும் இல்லை. அது அனைவருக்கும் கிடைத்தது. அது போன்று இப்போதும் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், புதிய தாராளவாத ப்ளேக் அதனை தடுத்துவிட்டது.” என்றார்.
ஆனால், தொற்றுநோய்க்கு பிந்தைய சாத்தியக்கூறுகள் "தீவிர சர்வாதிகாரம் உடைய மிருகத்தனமான அமைப்புகளை நிறுவுவதிலிருந்து. லாபமற்று மனிதாபிமானத்துடன் இயங்கிய அமைப்புகளை முழுவதுமான சிதைப்பது வரை இருக்கும் என்று கூறும் சாம்ஸ்கி, "அதிக சர்வாதிகாரம் நிறைந்த, மோசமான அமைப்புகள் புதிய தாராளமயத்துடன் மிகவும் ஒத்துப்போகும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
நன்றி : நியாஸ் அகமது