உலகின் வல்லரசு நாடு என மார்த்தட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்காவே கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதிலும், தடுப்பதிலும் திணறி வருகிறது. ஆனால் இந்தியாவின் கிழக்கே உள்ள வெறும் நான்கரை கோடி மக்கள் தொகையை (2018ம் ஆண்டின் படி) மட்டும் கொண்டுள்ள ஒடிசா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இதுவரையில் 6,217 பேர் பாதிக்கப்பட்டும் அதில் 569 பேர் குணமடைந்தும் உள்ளனர். இருப்பினும் 184 பேர் உயிரிழந்திருப்பது சற்று மனச்சிதைவையே தருகிறது. இருந்தாலும், கொரோனா பரவல் சமூக அளவில் எட்டிவிடக் கூடாது என்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கையில், ஒடிசா மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து பார்ப்போம்.
இயற்கைப் பேரிடர்களை திறம்பட கையாள்வதில் முன்னிலை வகிக்கும் மாநிலமாகத் திகழ்கிறது ஒடிசா. புயல், மழை என எத்தனை எத்தனையோ பேரிடர்களை சந்தித்துள்ள ஒடிசா மாநிலம் தற்போது உலகமே கண்டு அஞ்சும் கொரோனாவையும் தனக்கே உரிய பாணியில் கையாண்டு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
மார்ச் 16ம் தேதி ஒடிசாவில் முதல் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. ஆனால், மார்ச் 13ம் தேதியே பேரிடர் சட்டத்தை அமல்படுத்தியது நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா மாநில அரசு. இதுவரை 44 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில் இருவர் குணமடைந்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அரசின் செயலி மற்றும் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அவ்வாறு தாமாக முன்வந்து தனிமைப்படுத்திக்கொள்வோருக்கு 15வது நாளன்று ரூ.15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாமல், ‘தலைவன் எவ்வழியோ, தொண்டனும் அவ்வழியே’ என்ற சொற்றொடருக்கு ஏற்றவாறு, அமெரிக்கா சென்று திரும்பிய தனது சகோதரி குறித்து இணையதளத்திலும், செயலியிலும் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கே பதிவு செய்தார். அதன் பிறகு, வெளிநாடுகளுக்கு சென்று வந்த அதிகாரிகளும் தங்களது விவரங்களை பதிவு செய்து கொண்டனர்.
இதனையடுத்து, மக்கள் தாமாக முன்வந்து தங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். இதுவரை 5 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில், முக்கால்வாசி பேர் குறிப்பிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்தவராக இருப்பதால், பிரதமர் மோடி மார்ச் 22 சுய ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே ஒடிசாவில் ஊரடங்கை பிறப்பித்தார் முதலமைச்சர் நவீன் பட்நாயக்.
குறிப்பாக, ஊரடங்கால் மக்கள் எவ்வித இன்னல்களையும் சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக 5 மாவட்டங்களையும் நெறிமுறைகளோடு படிப்படியாக முடக்கப்பட்டது. 4 மாதங்களுக்கான ரேஷன் அரிசி, 4 மாதங்களுக்கான முதியோர் உதவித் தொகை வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது. இதுபோக, மருத்துவ மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான 4 மாத ஊதியம் முன்பணமாகவும் வழங்கப்பட்டது. நடைபாதை வியாபாரிகளுக்கு தலா ரூ.3 ஆயிரமும், கட்டடத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,500ம் வழங்கப்பட்டது.
மாநிலத்தில் உள்ள சுமார் 7 ஆயிரத்துக்கும் மேலான கிராம பஞ்சாயத்துகளில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவ முகாம்களும், கொரோனா சிகிச்சைக்கு என தனி மருத்துவமனையையும் ஒடிசா அரசு உருவாக்கியது.
இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த இரண்டு அரசு அதிகாரிகளே முன்னணியில் உள்ளனர். அதில் முக்கியமானவர்கள் முதலமைச்சரின் தனிச் செயலாளராக உள்ள வி.கார்த்திகேய பாண்டியனும், முதலமைச்சரின் தலைமை ஆலோசகராக உள்ள ஆர்.பாலகிருஷ்ணனும் ஆவர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான தேசிய ஊரடங்கு முடிய 5 நாட்களே உள்ள நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்த அரசாக ஒடிசா மாநிலம் உள்ளது.
ஒடிசா மாநில அரசின் இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் அனைத்து மாநிலங்களும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.