உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று வரை 690 ஆக உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் என்பது தெரியவந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தினசரி பாதிப்பு எண்ணிக்கையை அறிவிக்கும்போது தொற்று ஏற்பட்டவர்களின் பின்புலம் குறித்து தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் தமிழக சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ்.
இது கடும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது. தொடர்ந்து இப்படி அறிவிப்பது இஸ்லாமியரை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பிரசாரத்தை பரப்பும் வகையில் அரசே செயல்படுவதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் தற்செயலாக நடைபெற்ற நிகழ்வின் மூலம் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவம் ஏற்பட்டதை தினசரி சுட்டிக்காட்ட வேண்டியதன் அவசியம் என்ன எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ம.க எம்.பி அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறான அடையாளப்படுத்துதல் தேவையற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் எம்.பி கூறுகையில், “தினமும் பாதிப்பு எண்ணிக்கையை அறிவிக்கும்போது அதன் பின்புலம் குறித்து பேசுவது தேவையற்றது. மாநில அரசுகளின் தடுப்பு நடவடிக்கைப் போதாமையை மறைப்பதற்காக குறிப்பிட்ட பிரிவினர் மீது குற்றம்சுமத்தப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.