Corona Virus

“கொரோனாவை பரப்பி விடுவாய்; இங்கு வராதே”- குஜராத்தில் பெண் மருத்துவருக்கு அண்டை வீட்டார் மிரட்டல்! (Video)

குஜராத்தின் சூரத் நகரில் கொரோனா வார்டில் பணியாற்றியதாகக் கூறி பெண் மருத்துவரை கண்டு வசை பாடிய பக்கத்துவீட்டு தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

“கொரோனாவை பரப்பி விடுவாய்; இங்கு வராதே”- குஜராத்தில் பெண் மருத்துவருக்கு அண்டை வீட்டார் மிரட்டல்! (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் இதர பணியாளர்களுக்கும் உலகம் முழுவதும் பாராட்டுகளும், வாழ்த்துகளும், அரவணைப்புகளும் கிடைக்கப்பெற்று வருகின்றன. ஆனால் இந்தியாவில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர் பெண் மருத்துவர் சஞ்சீவினி. அவர் பணியாற்றும் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கென தனியே வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த மருத்துவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை.

“கொரோனாவை பரப்பி விடுவாய்; இங்கு வராதே”- குஜராத்தில் பெண் மருத்துவருக்கு அண்டை வீட்டார் மிரட்டல்! (Video)

இப்படி இருக்கையில், தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், மருத்துவமனையில் இருந்து வருகிறார் ஆகவே நமக்கும் கொரோனாவை பரப்பி விடுவார் என அந்த பெண் மருத்துவரைக் கண்டு வசைபாடியுள்ளார். மேலும், மருத்துவமனைக்குச் சென்றால் உங்களுக்கு எதிராக புகாரளிக்க வேண்டி வரும் என ஒருமையில் பேசியுள்ளார்.

இதுதொடர்பான காட்சியை அந்தப் பெண் மருத்துவர் தன்னுடைய செல்போனில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது குறித்து விளக்கமளிக்கும் விதமாக தான் வீடியோ எடுத்தும் வெளியிட்டுள்ளார் மருத்துவர் சஞ்சீவினி.

அதில், “எனக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். கொரோனா தொற்று இருப்பின் நான் எப்படி வீட்டுக்கு வருவேன்? மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வரும்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறேன். லேசான காய்ச்சல் இருந்தால் கூட நான் மருத்துவமனையிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொள்வேன்.” எனப் பேசியுள்ளார்.

இதனையடுத்து, சூரத் நகர போலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திய தம்பதியை கைது செய்ததோடு, மருத்துவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பும் அளித்து வருகின்றனர்.

முன்னதாக, மருத்துவப் பணியாளர்களுக்கு ஆதரவாக கை தட்டினால் மட்டும் போதாது, அவர்களின் சேவைக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்க வேண்டும் என வீடியோவைப் பகிர்ந்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories