நாடு முழுவதுமுள்ள 200க்கும் மேலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்டத்தில்தான் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும், சமூகப் பரவல் அளவில் பரவத் தொடங்கிவிட்டால் அதீத உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும் என்பதற்காகவே, கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு மத்திய அரசு தேசிய ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது.
இதனையடுத்து, அனைத்து மாநில அரசுகளும் இந்த ஊரடங்கை அமல்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த 21 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஊரடங்கு இடைவெளிவிட்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
ஆனால், மத்திய அரசோ இதுவரை அப்படியொரு முடிவு எதுவும் எடுக்கவில்லை எனக் கூறியுள்ளது. இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் 364 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், 33 பேர் குணமடைந்த நிலையில், 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதனால், கொரோனா வைரஸ் மேலும் பரவாத வண்ணம் மக்கள் எவரும் வெளியே வரக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அம்மாநில அரசு. முன்னதாக, அவசியமின்றி வெளியே வந்தால் துப்பாக்கிச் சூடு நடத்தவும் உத்தரவிடப்படும் என முதலமைச்சர் சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இப்படி இருக்கையில், தெலங்கானா மாநிலத்தில் ஜூன் மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அண்மையில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அவ்வாறு எந்த நீட்டிப்பு உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், ஏப்ரல் 14க்குப் பிறகு 2 வார காலத்திற்கு நீட்டிக்க ஆலோசிக்க இருப்பதாகவும் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.
மேலும், இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொருளாதார இழப்பைக் கணக்கில் கொள்ளாமல், மக்களின் உயிரே முக்கியம் எனக் கருத்து தெரிவித்து, ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.