கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 3,482 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 238 பேர் குணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிகளவிலான கொரோனா பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. 537 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் 485 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 74 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ளா 485 பேரில் 422 பேர் டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று 2 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.
சென்னையில் மட்டுமே 84 பேர் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் பெருநகர மாநகராட்சி சார்பாக பல்வேறு கெடுபிடிகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதுப்பேட்டை, பிராட்வே, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், போரூர், கோட்டூர்புரம், விருகம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதித்த நோயாளிகள் இருப்பதால் அந்தப் பகுதிகளில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் சமூக அளவில் பரவிடக்கூடாது என்பதற்காக நாளை (ஏப்ரல் 5) முதல் காலை 6 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்தினருக்கான பொருட்கள் அவர்களது வீட்டுக்கே சென்று வழங்குவதற்கு சமூக ஆர்வலர்கள் அரசுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல, ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, மார்ச் 24ம் தேதி அன்று டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த இன்டிகோ (03:15) மற்றும் ஏர் ஏசியா (18:25) விமானங்களில் பயணம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், தங்களது வீட்டிலேயே 28 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதோடு, கொரோனா குறித்த அறிகுறிகள் ஏதேனும் இருப்பினும் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்குமாறு கூறி தொடர்புகொள்ள வேண்டிய உதவி எண்களையும் பெருநகர சென்னை மாநகராட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.