சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் எனும் ஆட்கொல்லி நோய் தற்போது உலகின் 200க்கும் மேலான நாடுகளைப் புரட்டிப்போட்டு வருகிறது. இந்த வைரஸ் நோய்க்கு மருந்துகள் ஏதும் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் உலக நாடுகள் சவாலையும் சிக்கலையும் எதிர்கொண்டு வருகின்றன.
இப்படி இருக்கையில், கடந்த புதன் அன்று ஜப்பான் நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசிய துணை பிரதமர் டாரோ அஸோ, உலக சுகாதார அமைப்பை கடுமையாக சாடியிருந்தார். அதில், சீனா சுகாதார அமைப்பு என உலக சுகாதார அமைப்பு தனது பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார்.
உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து போதுமான மதிப்பீட்டை இயற்றவில்லை எனக் கூறிய டாரோ அஸோ, கொரோனா தொற்றுநோய் பாதிப்பை கையாண்டது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநராக உள்ள டெட்ராஸ் பதவி விலக வேண்டும் எனவும் கூறினார். இதற்காக 5 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறினார்.
அதேபோல, உலக சுகாதார அமைப்பு அரசியல் ரீதியில் நடுநிலையைப் பேணவில்லை என்றும், கொரோனா தொடர்பாக சீன அரசு கொடுத்துள்ள தரவுகளை டெட்ராஸ் கண்மூடித்தனமாக நம்புகிறார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், உலக சுகாதார அமைப்பில் இருந்து தைவானை விலக்கக் கூடாது என்றும் டாரொ அஸோ வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, இந்த ஆண்டு நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுக்காக ஜப்பான் அரசு 35 ட்ரில்லியன் யென் முதலீடு செய்திருந்தது. தற்போது டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஜப்பான் அரசு தனது கோபத்தை கொட்டித் தீர்த்துள்ளதா என கேள்விகள் எழுந்துள்ளன.