உலகையே புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவிரைவில் முடிவுக்கு வந்துவிடும் என நோபல் பரிசு வென்ற அறிவியல் ஆய்வாளர் மைக்கேல் லெவிட் கூறியுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் 19 எனும் ஆட்கொல்லி வைரஸ் தொற்று நோய் தற்போது உலகின் 200க்கும் மிகாத நாடுகளில் பரவி பல்லாயிரக் கணக்கான உயிர்களை பலிவாங்கி வருகிறது. இதனால் உலக அளவில் பொருளாதார நிலை கடுமையான அழிவை சந்தித்து வருகிறது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்துக்கு மேல் இருந்தாலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையோ 7 லட்சத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக இயற்பியலாளரும், நோபல் பரிசு வென்றவருமான அறிவியல் ஆய்வாளார் மைக்கேல் லெவிட், லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ்க்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், உலகெங்கும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என்றும், சமூகத்தில் இருந்து மக்கள் விலகி இருத்தல் வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனெனில் சமூக விலகலே கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தாக இருக்க முடியும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சீனாவை போன்று அமெரிக்காவும் விரைவில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டும் வரும். ஆனால் அதிக உயிரிழப்புகள் ஏற்படாது என மைக்கேல் லெவிட் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பாக ஜனவரி மாதம் முதல் ஆய்வு மேற்கொண்டு வரும் இவர், சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா கொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு சிக்கும் என தெரிவித்திருந்தார். அதுபோலவே அமெரிக்காவில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சீனாவிலும் கொரோனாவால் 80 ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்படுவார்கள் என்றும், 3 ஆயிரத்துக்கும் மேலானோர் உயிரிழக்க நேரிடும் என்றும் கூறியிருந்தது. அதுவும் நடந்தது.
இந்நிலையில், தற்போது கொரோனாவின் தாக்கம் முடிவுக்கு வரும் என அவர் கூறியிருப்பது சற்று ஆறுதல் அளித்துள்ளது.