இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தினசரி அதிகரித்து வருகிறது. ஆகையால் தொற்று சமூக பரவலாக உருமாறி விடக்கூடாது என்பதற்காக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவலை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளுக்கு நிவாரண நிதியளிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பிரதமர் மற்றும் முதலமைச்சரின் நிவாரண நிதி வங்கிக் கணக்கில் அவர்களால் இயன்றதைச் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் ஏழு பேரில் ஒருவரான ரவிச்சந்திரன், கொரோனா நிவாரண நிதிக்காக, சிறையில் தான் ஈட்டிய வருமானமான ஐந்தாயிரம் ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதி கணக்குக்கு அனுப்பியுள்ளார்.
மேலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டுத் தெரிவித்த ரவிச்சந்திரன், ஊரடங்கு உத்தரவை மக்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டபோது ரூ.5 ஆயிரமும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்திட ரூ.20 ஆயிரமும் ரவிச்சந்திரன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.