Corona Virus

"கொரோனா வைரஸின் காதலி யார்?" - கன்னியாகுமரி போலிஸார் வைக்கும் விநோத தேர்வு! #CoronaLockDown

ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்படாமல் தெருவில் சுற்றுபவர்களுக்கு கன்னியாகுமரி போலிஸார் விநோத தேர்வு ஒன்றை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் பல்வேறு இடங்களில் பலர் ஊரடங்கை மதிக்காமல் இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்து வருகின்றனர்.

அப்படி சுற்றித் திரிபவர்களை போலிஸார் கடுமையாக எச்சரித்தும், லத்தியால் அடித்தும் விரட்டி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கிற்கு கட்டுப்படாதவர்கள் மீது போலிஸார் வழக்குப்பதிவும் செய்து வருகின்றனர். பலர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டும் வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே அம்மாவட்டத்தில் ஊரடங்கிற்கு கட்டுப்படாமல் பலர் வெளியில் ஊர் சுற்றி வருவதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் நோயின் தாக்கம் விரைவாக பரவக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது.

இவ்வாறு ஊர் சுற்றுபவர்களுக்கு விநோத தண்டனை கொடுக்கவும், கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கன்னியாகுமரி மாவட்ட போலிஸார் விநோத தேர்வு ஒன்றினை நடத்துகின்றனர்.

"கொரோனா வைரஸின் காதலி யார்?" - கன்னியாகுமரி போலிஸார் வைக்கும் விநோத தேர்வு! #CoronaLockDown

அந்த வகையில் ஊரடங்கிற்கு அடங்காமல், தேவையில்லாமல் தெருக்களில் சுற்றி வருபவர்களை பிடித்து அவர்களிடம் 10 கேள்விகள் அடங்கிய வினாத்தாளை தருகின்றனர். கொரோனா விழிப்புணர்வு பற்றிய அந்த 10 கேள்விகளுக்கும் சரியாக விடையளித்துவிட்டால் அந்த நபர் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்படுவார்.

ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண். ஒரு கேள்விக்கு தவறான விடையளிப்பவர்கள் 10 தோப்புக்கரணம் போடவேண்டும் என்பதே தண்டனை ஆகும். 10 கேள்விக்கும் தவறான விடை அளித்தால் 100 தோப்புக்கரணங்கள் போட வேண்டும்.

மேற்கண்ட கேள்வித்தாளில் கொரோனா எப்போது உருவானது? கொரோனா வைரஸின் காதலி யார் என்று தெரியுமா? சமூக விலகல் என்றால் என்ன? என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் அடங்கியுள்ளன.

இந்த வினாத்தாள்கள் சாலைகளில் பிடிபடுபவர்களுக்கு வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் பெயிலானவர்களுக்கு தோப்புக்கரணம் நிச்சயம். கன்னியாகுமரி போலிஸார் நடத்தும் இந்த விநோத தேர்வின் கேள்வித்தாள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுசரி, கொரோனா வைரஸின் காதலி யார் என்று உங்களுக்குத் தெரியுமா?!

banner

Related Stories

Related Stories