கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. இதுவரை 873 பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் 79 பேர் குணமடைந்துள்ள நிலையில் 775 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆகவே, கொரோனா பரவலை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக அவசரகால தனிமைப்படுத்தும் சிகிச்சைக்காக ரயில் பெட்டிகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்தது.
இது தொடர்பாக, அண்மையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓய்வுபெற்ற, தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்க அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியன் ரயில்வேக்கு சொந்தமான ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப்பணியாளர்களுக்கான இருக்கைகள், கழிவறைகள், கைகழுவும் இடம் என ரயில் பெட்டிகள் முழுவதும் மருத்துவமனை போன்று உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில் மருத்துவமனை மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள அசாம் மாநிலத்துக்கு முதலில் அனுப்பப்படுகிறது.