இந்தியாவிலும் தனது தீவிரத்தைக் காட்டி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இன்று ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், மதுரையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையே, கொரோனா தொற்று அச்சம் காரணமாக சிறையில் இருக்கும் சிலருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சிறையில் இருப்பவர்களை குடும்பத்தார் சென்று சந்திக்க தடை விதிக்கப்பட்டது.
இதனால், குடும்பத்தினர், நண்பர்கள் பற்றி அறிய முடியாமல் சிறைக் கைதிகள் மிகுந்த துயருற்றனர். தங்களது குடும்பத்தினருடன் பேசுவதற்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து தருமாறு சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு சிறைத்துறை 58 ஸ்மார்ட் போன்களை வாங்கி, சிறையில் இருக்கும் கைதிகள், தங்கள் குடும்பத்தினரோடு பேசும் வகையில் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது.
அதன்படி சிறையில் இருப்போர், இந்த கொரோனா துயர்காலத்தில் தங்கள் குடும்பத்தினருடன் உரையாடி வருகின்றனர். அப்படி, ஒரு கைதி தனது மகளுடன் பேசும் காட்சி காண்போரை கலங்கச் செய்வதாக உள்ளது. இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.