Corona Virus

“ஊரடங்கு விதியை மீறுவோரை சுடும் போலிஸாருக்கு ரொக்கப் பரிசு” - உ.பி பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு!

கொரோனா ஊரடங்கை மீறுவோரை தேசவிரோதிகள் போலவும், தீவிரவாதிகள் போலவும் நடத்தவேண்டும் என உத்தர பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ பேசியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலைக்கு தீவிரமாகச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக இந்தியாவில் 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும், நாட்டின் பல்வேறு நகரங்களில் இளைஞர்கள் உள்ளிட்ட சிலர் வெறிச்சோடிய சாலைகளை பார்வையிடவும், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும் அவ்வப்போது பொதுவெளியில் நடமாடுவதைப் பார்க்க முடிகிறது.

இதனால் பாதுகாப்பு பணியில் உள்ள போலிஸார் அவ்வாறு வெளியே சுற்றித்திரிபவர்களை தோப்புக்கரணம் போட வைப்பது, சாலையில் உருள வைப்பது என ஆங்காங்கே நூதன தண்டனை வழங்கியும், வழக்குப்பதிவு செய்தும், அபராதமும் விதித்து வருகின்றனர். சிலர் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியும் வருகின்றனர்.

இப்படி இருக்கையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த காசியாபாத் பா.ஜ.க எம்.எல்.ஏ. நந்த் கிஷோர் குர்ஜா ஊரடங்கு உத்தரவை மீறுவோர் குறித்து சர்ச்சையைக் கிளப்பும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“ஊரடங்கு விதியை மீறுவோரை சுடும் போலிஸாருக்கு ரொக்கப் பரிசு” - உ.பி பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஊரடங்கு உத்தரவை மீறி பொதுவெளியில் நடமாடுபவர்களின் கால்களை காவல்துறையினர் உடைத்தெறியவேண்டும். இல்லையேல் அவர்களின் காலிலேயே சுடுங்கள்.

இதுபோன்ற ஆட்கள் தேசவிரோதிகள் போலவும், தீவிரவாதிகள் போலவும் நடத்தப்படவேண்டும். மேலும், விதிகளை மீறுபவர்களின் காலில் சுடும் காவலர்களுக்கு ரூ.5,100 சன்மானமாக வழங்கப்படும்.” எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

ஏற்கெனவே பசுவின் கோமியத்தை குடித்தால் கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்த முடியும் என நந்த் கிஷோர் குர்ஜா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories