சீனாவை அடுத்து, கொரோனாவால் அதிபயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு என்றால் அது இத்தாலி. சீனாவில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையை மிஞ்சி அசுர வேகத்தில் சென்றுக்கொண்டிருக்கிறது இத்தாலி.
60 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரையில் சுமார் 6000 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதனால் அந்நாட்டில் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அரசோ செய்வதறியாது திணறி வருகிறது.
இப்படி இருக்கையில், இத்தாலியில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பெர்கமோவில் உள்ள லவ்வெரே மருத்துவமனையில்தான் 72 வயதான பாதிரியார் ஃப்ரியர் டான் கியூசெப்பே பெரார்டெலி மரணித்தார்.
முன்னதாக அவருக்கு கொரோனா சிகிச்சையின் போது சுவாசக் கருவி மூலம் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதனை ஏற்க மறுத்துவிட்டு அவரை போலவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞருக்கு அதை கொடுத்துள்ளார்.
அதன் பிறகு கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பாதிரியார் பெரார்டெலி உயிரிழந்தார். இது தொடர்பான செய்தியை இத்தாலியின் அரபெராரா என்ற செய்தி நிறுவனம் சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மருத்துவமனையின் சுகாதார ஊழியர் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.
இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருப்பதால், மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் யாருக்கு சுவாசக் கருவி மிகவும் அவசியமோ அவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.