இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் சமூக பரவாலாக உருவெடுத்துவிடக் கூடாது என்பது மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆகையால் மக்களை வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை தவிர, மக்கள் அதிகம் கூடும் கடைகள், சந்தைகள் என பலவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், கட்டுமான பணிகளையும் நிறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தினக்கூலி பெறுபவர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும். குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி பருப்பு போன்றவற்றை வழங்குவதாகவும் சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், ஊரடங்கால் கடுமையான பாதிப்பை சந்திக்கும் டெல்லி கட்டுமானத் தொழிலாளர்களின் அன்றாட தேவைக்காக முதலமைச்சர் கெஜ்ரிவால் 5000 ரூபாய் அளிப்பதாக அறிவித்துள்ளார்.
அதுபோக, வீடற்றவர்களுக்காக இரவு நேர முகாம்களை அதிகபடுத்தவும், வாடகை வீடுகளில் குடியிருக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு சலுகைகளையும் அறிவித்துள்ளார் கெஜ்ரிவால். இந்த நடவடிக்கை டெல்லி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.