நடப்பாண்டு ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற இருந்தது. ஆனால், தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், கொரோனா அச்சம் காரணமாக இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டு ஒலிம்பிக் கமிட்டிகள் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
அதேபோல, திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டால் எங்கள் நாட்டு வீரர், வீராங்கனைகளை அனுப்பமாட்டோம் என கனடா, ஆஸ்திரேலிய போன்ற நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்திருந்தன.
இந்நிலையில், டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியை அடுத்த ஆண்டு ஒத்திவைப்பது தொடர்பாக 4 வாரத்துக்குள் முடிவெடுக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்திருந்தது.
அதேபோல, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசும் போது, ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யும் எண்ணம் எப்போதும் இல்லை. கொரோனா அச்சுறுத்தலால் வீரர், வீராங்கனைகளின் உடல்நலன் கருதி ஒத்திவைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளார்.
இப்படி இருக்கையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஓராண்டுக்கு டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைப்பதாக முடிவு எட்டப்பட்டதாக அதன் உறுப்பினர் டிக் பெளண்ட் USA Today செய்திக்கு பேட்டி அளித்திருந்தார்.
அதன்படி, ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பாச், ஜப்பான் பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த ஷின்ஷே அபே டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என அறிவித்தார்.
முன்னதாக, ஜப்பான் நாட்டில், கொரோனா காரணமாக 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.