Corona Virus

கொரோனா வைரஸ் பரிசோதனைக் கருவிகளைத் தயாரித்த இந்திய நிறுவனம் - ICMR ஒப்புதல்! #Corona

கொரோனா வைரஸ் சோதனைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் கிட் இதுவாகும்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 511 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பரிசோதனைக் கருவிகள் பற்றாக்குறை காரணமாக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் பரிசோதனைக் கருவிகளைத் தயாரித்த இந்திய நிறுவனம் - ICMR ஒப்புதல்! #Corona

கொரோனா வைரஸின் தாக்கத்தைப் புரிந்துகொண்டு அதிகமான மக்களைப் பரிசோதித்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் நிறுவனம், COVID-19 வைரஸ் கண்டறியும் சோதனைக் கருவிகளை உருவாக்கி, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் சோதனைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் கிட் இதுவாகும். கோவிட் 19 வைரஸை கண்டறியும் இந்த பரிசோதனைக் கருவி Reverse transcription polymerase chain reaction (RT-PCR) tests என அழைக்கப்படுகிறது.

இந்த கிட்டின் விலை ரூபாய் 80 ஆயிரமாக இருக்கும் எனவும், ஒரு கிட் மூலம் 100 நோயாளிகளைப் பரிசோதனை செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு வாரத்தில் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும், வெளிநாட்டில் இருந்து வாங்குவதை விட நான்கு மடங்கு விலை குறைவாக இந்த கிட்களை தயாரிக்கலாம் எனவும் மைலேப் ஆராய்ச்சியாளர் ரஞ்சித் தேசாய் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரிசோதனைக் கருவிகளைத் தயாரித்த இந்திய நிறுவனம் - ICMR ஒப்புதல்! #Corona

தற்போதைய ஆய்வக அடிப்படையிலான சோதனையில், சோதனை முடிவுகள் வெளிவருவதற்கு நாட்கணக்கில் ஆவதாகக் கூறப்படுகிறது. மைலேப் டிஸ்கவரி கருவிகளின் மூலம் இரண்டரை மணிநேரத்தில் கொரோனா பரிசோதனை செய்யலாம் என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹஷ்முக் ராவால் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் டிரைவிட்ரான் நிறுவனமும் கொரோனா பரிசோதனை கிட் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இவை மருத்துவப் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டால் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

banner

Related Stories

Related Stories