உலகளவில் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸ் முதலில் 1 லட்சம் பேரை பாதிப்பதற்கு 67 நாட்கள் எடுத்துக்கொண்டது. ஆனால் அதன் பிறகு சில நாட்களிலேயே 3 லட்சத்துக்கும் மேலானோரை துரிதமாக பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் கவலை தெரிவித்துள்ளார்.
நேற்று (மார்ச் 23) காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம், சீனா கொரோனா வைரஸ் தொடங்கிய போது சுமார் 1 லட்சம் மக்களுக்கு பரவ 67 நாட்கள் ஆனது. அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது ஒரு லட்சம் பேருக்கு பரவ 11 நாட்கள் ஆனது. ஆனது அடுத்த 1 லட்சம் பேருக்கு வெறும் 4 நாட்களில் பரவின.
இது மிகவும் வருத்தமளிக்கக் கூடிய ஒன்று. சமூக பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு மட்டும் பிறப்பித்தால் போதாது. தற்காப்பு நடவடிக்கைகள் மட்டுமே தேவை. சந்தேகிக்கப்படும் ஒவ்வொருவரையும் சோதித்து முறையான சிகிச்சை கொடுத்து, அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் வேண்டும்.
உலகெங்கிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட நாடுகளில் சீல் வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்து செயல்பட்டால் மட்டுமே நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும்.
மேலும், மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள தடைகளை ஜி20 நாடுகள் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்,