ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நோயின் பிறப்பிடமான சீனாவையே உயிரிழப்பு எண்ணிக்கையில் மிஞ்சியுள்ளது இத்தாலி.
சுமார் 5 ஆயிரத்துக்கும் மேலானோர் இத்தாலியில் கொரோனாவால் பலியாகியுள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேலான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் இத்தாலி அரசு திணறி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மருத்துவப் பணியாளர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல ஃபியட் மற்றும் ஃபெராரி வாகன உற்பத்தி நிறுவனத்தைச் சேர்ந்த அக்னெல்லி குடும்பத்தார், இத்தாலி அரசுக்கு 10 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் 81 கோடி ரூபாய்) வழங்கியுள்ளது.
மேலும், வைரஸ் பாதிப்பால் தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களின் செயற்கை சுவாசத்திறனுக்காக 150 வென்டிலேட்டர்களையும் வழங்கியுள்ளது இந்த நிறுவனம்.
அக்னெல்லி குடும்பம் இத்தாலியின் மிகப்பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்றாக விளங்குகிறது. மேற்குறிப்பிட்டது மட்டுமல்லாமல், மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்குவதற்காக இத்தாலியின் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு ஃபெராரி மற்றும் ஃபியட் நிறுவனம் சார்பில் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது.