Corona Virus

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா- 10 நாட்களில் 6 மடங்கு அதிகரித்த நோய் தாக்கம்! #CoronUpdates

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைத்தது தமிழக அரசு.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்களிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. நான்கு பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில் 298 பேர் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 10 ஆம் தேதி 50 பேருக்கு மட்டுமே இருந்த கொரோனா தொற்று அடுத்த பத்து நாட்களில் 6 மடங்கு உயர்ந்து இன்று 300-ஐ தொட்டுள்ளது என சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா, கேரளாவில் அதிகளவில் கொரோனா வைரஸுக்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை மூவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் உறுதியானது. அதில் ஓமன் நாட்டில் இருந்து வந்த காஞ்சியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளிக்கு குணமாகிவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா- 10 நாட்களில் 6 மடங்கு அதிகரித்த நோய் தாக்கம்! #CoronUpdates

அதன் பிறகு டெல்லியில் இருந்து ரயில் வழியாக வந்த இளைஞருக்கும், அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது இளைஞருக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (மார்ச் 21) ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில் தாய்லாந்தைச் சேர்ந்த இருவருக்கும், நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானதாகவும், இருவரது உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து ஆயிரத்து 72 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதில் 8,950 பேர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேரும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்பது அவர்களது பயண விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது என விஜயபாஸ்கர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மத்திய அரசு நாளை ‘தேசிய மக்கள் ஊரடங்கு’ அறிவித்துள்ள நிலையில் சென்னையில் உள்ள கடற்கரைகளை மறு உத்தரவு வரும் வரையில் மூடி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதேபோல, மார்ச் 27ம் தேதி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 14 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories