Corona Virus

“நாங்க இல்லைன்னா வேற யார் இருக்கா?” - கொரோனாவை எதிர்த்து முன்வரிசையில் நிற்கும் களவீரர்கள்!

நோய் தொற்றுவதற்கான அபாயமும், வாய்ப்புகளும் நிறைந்திருந்தாலும், தொற்று ஏற்பட்ட உயிர்களைக் காக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் ஊணுறக்கமின்றி உழைக்கின்றனர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள்.

“நாங்க இல்லைன்னா வேற யார் இருக்கா?” - கொரோனாவை எதிர்த்து முன்வரிசையில் நிற்கும் களவீரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“இது எங்கள் வேலை; நாங்கள் அதை அர்ப்பணிப்போடு செய்வோம். நாங்கள் எந்தவொரு சூழலிலும் எங்களால் முடிந்ததைச் செய்வோம் என உறுதியெடுத்திருக்கிறோம்.” என்கிறார் பாப்பா ஹென்றி எனும் செவிலியர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருவது மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், இதுபோன்ற அவசர காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பணி சவால் நிறைந்தது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 24 பேர் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாநிலத்தில் முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 237 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நோய் தொற்றுவதற்கான அபாயமும், வாய்ப்புகளும் நிறைந்திருந்தாலும், தொற்று ஏற்பட்ட உயிர்களைக் காக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் ஊணுறக்கமின்றி உழைக்கின்றனர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள்.

“நாங்க இல்லைன்னா வேற யார் இருக்கா?” - கொரோனாவை எதிர்த்து முன்வரிசையில் நிற்கும் களவீரர்கள்!
Courtesy : The News Minute

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து முன்வரிசையில் நிற்கும் வீரர்களான செவிலியர்கள் பணிநேரக் கணக்கின்றி உழைத்து வருகின்றனர். குழந்தைகளையும், குடும்பத்தினரையும் சந்திக்க இயலாமல் நோயகற்றுவதே முக்கியப் பணி எனச் சுற்றிச் சுழலும் செவிலியர்களுக்கு நிச்சயம் சல்யூட் வைக்கலாம்.

ஆனால், நோயாளிகளோடு எப்போதும் தொடர்பில் இருக்கும் செவிலியர்களை சமூகம் ஒதுக்கி வைக்கும் அவலமும் நிகழ்கிறது. கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் 3 ஆண் செவிலியர்களை, கொரோனா அச்சம் காரணமாக வீடுகளிலிருந்து காலி செய்யுமாறு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையிலேயே தங்கியுள்ளனர்.

இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளையும் மீறி, தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பணிகளில் அவர் சோர்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மலையாளத்தில் வெளிவந்த ‘வைரஸ்’ திரைப்படம் ‘நிஃபா’ வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களை உயிரைப் பணயம் வைத்து மீட்ட மருத்துவர்கள் - செவிலியர்களின் தியாகத்தை உணர்த்தியது.

“நாங்க இல்லைன்னா வேற யார் இருக்கா?” - கொரோனாவை எதிர்த்து முன்வரிசையில் நிற்கும் களவீரர்கள்!

“வெள்ளம், நிஃபா வைரஸ், கொரோனா வைரஸ் என எதுவாக இருந்தாலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. இது எங்கள் வேலை; நாங்கள் அதை அர்ப்பணிப்போடு செய்வோம். நாங்கள் எந்தவொரு சூழலிலும் எங்களால் முடிந்ததைச் செய்வோம் என உறுதியெடுத்திருக்கிறோம். அதைத்தான் இப்போதும் எப்போதும் செய்கிறோம்” என்கிறார் பாப்பா ஹென்றி எனும் செவிலியர்.

பாப்பா ஹென்றி (41) கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இவர் ஒவ்வொரு வாரமும் தனது இரண்டு குழந்தைகளைச் சந்திக்க வீட்டுக்குச் செல்வார். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக, 5 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் படிக்கும் தனது இரண்டு குழந்தைகளைச் சந்திக்கச் செல்லாமல் பணி செய்கிறார்.

"நிலைமை சவாலானது; ஆபத்தானது, அந்த உண்மையை மறுப்பதற்கில்லை. ஆனால் நாம் இல்லையென்றால், யார் இருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி. எனவே, தனிப்பட்ட பிரச்னைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தொற்றுநோயை எதிர்த்துப் போராட நாங்கள் இங்கு ஒன்றுபட்டுள்ளோம். அதேநேரத்தில் எங்களுக்கான பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்வதில்லை” என்கிறார் கோட்டயம் மருத்துவக் கல்லூரியின் தொற்று நோய்கள் துறைத் தலைவர் டாக்டர் சஜித் குமார்.

கொரோனா எனும் பேரரக்கனை எதிர்த்துப் போராடும் இச்சூழலில் செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, நம்மால் ஆனதைச் செய்வதே இப்போதைக்கு அவசியமானது.

banner

Related Stories

Related Stories