சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், தற்போது உலகின் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை பீதியடைய வைத்துள்ளது. இதனால் உலக அளவில் பொருளாதாரம் மிக மோசமான சூழலை சந்தித்து வருகிறது.
உலக அளவில் இந்த கொரோனா வைரஸால் 2 லட்சத்து 10,989 பேர் பாதிக்கப்பட்டும், 8,846 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும், 84,220 பேர் இந்த நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும், 6,163 பேர் மோசமான நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தற்போது சீனாவை விட இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவில் 3,245 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், அதைவிட இத்தாலியில் குறுகிய காலத்திலேயே 2,978 பேர் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவின் மையப்பகுதியாக இருக்கும் வூஹானில் புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது. இதன் மூலம் வூஹானில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தொற்று பரவல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு வீச்சில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதில் நேற்று மட்டும் ஹுபெய் மாகாணத்தில் 8 பேரும், வூஹானில் 6 பேரும் கொரோனாவால் பலியாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் கொரோனாவால் சீனாவில் ஏற்படும் பலி எண்ணிக்கை ஒற்றை இலக்காக குறைந்துள்ளது.
நிலைமை சீரடைந்து வரும் சமயத்தில், வெளிநாடுகளில் இருந்து சீனா வந்த 34 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.