சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸின் தாக்குதலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவைக் காட்டிலும் இத்தாலியில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வருகிறது.
அதனால் அந்நாடே ஸ்தம்பித்துள்ளது. தற்போதுவரை இத்தாலியில் 27,980 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் 2,749 பேர் இந்த நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
வைரஸ் பரவாமல் இருக்க மக்கள் தங்களைத் தாங்களே தூர விலக்கிக் கொண்டிக்கின்றனர். அரசும் மக்களை வெளியில் வரவேண்டாம் என வற்புறுத்தி வருகிறது. எல்லா இடங்களிலும் மக்கள் பதற்றத்திலும் பீதியிலும் இருப்பதால் வணிகம் முற்றிலும் முடங்கியுள்ளது. சாலைகளில் ஆள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன.
இது ஒருபுறமிருக்க, மற்றொரு விரும்பத்தக்க நிகழ்வும் அங்கே நடந்துள்ளது. வெனிஸ் நகரின் கால்வாய்ப் பகுதிகளில் நீர்வழிப் போக்குவரத்து குறைவாக இருப்பதால் நீர் தெளிவாக காட்சி அளிக்கிறது. இதனால் நீருக்குள் இருக்கும் வண்ணமயமான மீன்களும் நீரின் மேற்பகுதிக்கு வந்துள்ளன. அதேபோல், நீர்வாழ் உயிரினங்களும் சுதந்திரமாக உலவி வருகின்றன.
அதுமட்டுமின்றி, இத்தாலியின் மாசுபாடு அளவு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. கொரோனா பரவுவதால் நீர்வழிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இத்தாலி மீது நைட்ரஜன் டை ஆக்சைடு உமிழ்வு கணிசமாகக் குறைந்துவிட்டதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகெங்கிலும் இருந்து மனச்சோர்வளிக்கும் செய்திகளை மட்டுமே கொண்டு வந்திருந்தாலும், இந்த செய்தி உண்மையில் ஒரு நிவாரணமாக அமைந்துள்ளது என பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர்.