Corona Virus

“மனிதர்களைக் காப்பாற்றுவதே தலையாய கடமை” : கொரோனா பாதித்த பயணிகளை அரவணைத்த கியூபா!

நடுக்கடலில் தத்தளித்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களை பிற நாடுகள் அனுமதிக்காத நிலையில், கியூபா அரசு அனுமதியளித்தது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“மனிதர்களைக் காப்பாற்றுவதே தலையாய கடமை” : கொரோனா பாதித்த பயணிகளை அரவணைத்த கியூபா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பல நாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மனித நடமாட்டத்தைக் குறைத்தபோதும் கொரோனா தனது வீரியத்தைக் குறைத்துக்கொள்ளாமல், தற்போது 152 நாடுகளுக்குப் பரவியுள்ளது.

சொந்த நாட்டு மக்களைக் கைவிடும் பல அரசுகளின் மனித நேயமற்ற செயலும், போராடி மக்களை மீட்கும் அரசின் நடவடிக்கைகளும் ஒருசேர நடந்துவருகிறது. எந்த நாட்டைச் சேர்ந்தவரும் சுதந்திரமாக மற்ற நாடுகளுக்கு சென்று வர முடியாதபடி நாட்டின் எல்லைகளையே அரசுகள் மூடியுள்ளன.

வைரஸ் பரவுதைத் தடுக்கும் முயற்சி என்றாலும் சில நேரங்களில் இந்த செயல் ஆபத்தாகவும் முடிகிறது. கொரோனா பரவுவதற்கு முன்பே கடல்வழிப் போக்குவரத்தில் ஈடுபட்ட பலரும் நடுக்கடலில் தத்தளிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

“மனிதர்களைக் காப்பாற்றுவதே தலையாய கடமை” : கொரோனா பாதித்த பயணிகளை அரவணைத்த கியூபா!

அந்த வகையில், எந்த நாடும் அனுமதிக்காத பயணிகளை தங்கள் நாட்டு விருந்தாளிகளாக அழைத்து வந்துள்ளது கம்யூனிச கியூபா. மகத்தான தலைவர்களான சேகுவேரா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ உருவாக்கிய ஆட்சியமைப்பின் கீழ் அரசை வழிநடத்தும் கியூபா, மக்களை மனித நேயத்துடன் அனுகியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த பிரட் ஆல்சன் எனும் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எஸ்.ப்ரைமர் எனும் பயணிகள் கப்பல் கரீபியக் கடல் வழியாக 1,128 பயணிகளுடனும், 384 மாலுமிகள் உள்ளிட்ட பணியாளர்களுடனும் சென்றுகொண்டிருந்தது.

பயணத்தின் இடையில், சில பயணிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கப்பலுக்குள் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதிலும் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கொரோனா பாதிப்பாக இருக்கும் என்று அச்சம் எழுந்தது. அதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், 2 அமெரிக்கர்கள், 2 பிரிட்டிஷ்காரர்கள், 4 பிலிப்பைன்ஸ் நாட்டவர் என 8 பயணிகள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்தது.

“மனிதர்களைக் காப்பாற்றுவதே தலையாய கடமை” : கொரோனா பாதித்த பயணிகளை அரவணைத்த கியூபா!
Markus Scholz

உடனடியாக கப்பலை ஏதேனும் துறைமுகத்தில் நிறுத்தி அனைத்து பயணிகளையும் இறக்கி உரிய பரிசோதனைகளும் சிகிச்சைகளும் மேற்கொண்டு அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைத்து விடலாம் என முடிவு செய்த கப்பல் நிர்வாகம், கப்பல் செல்லும் திசையில் உள்ள பல நாட்டின் துறைமுகங்களுக்கு அனுமதி கோரி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆனால், எங்கும் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதற்கிடையே 5 பேருக்கு கோவிட் - 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவல் கியூபா அரசுக்கு சில நாட்களுக்கு முன்பு தெரியவந்துள்ளது. இதனிடையே கப்பல் மாலுமிகளும் கீயூபா அரசுக்கு வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து கியூபா அரசு தங்கள் நாட்டில் கப்பலை நிறுத்திக்கொள்ள அனுமதி அளித்தது. கியூபாவின் தலைநகரான ஹவானாவில் அமைந்துள்ள மரியேல் துறைமுகத்தில் ப்ரைமர் கப்பல் நங்கூரமிட உத்தரவு கிடைத்தது.

“மனிதர்களைக் காப்பாற்றுவதே தலையாய கடமை” : கொரோனா பாதித்த பயணிகளை அரவணைத்த கியூபா!

பின்னர், கப்பலுக்குள் இருந்த பயணிகள், பணியாளர்களுக்கு உரிய சோதனைகள் நடத்திய கியூபாவின் மருத்துவர்கள், அவர்களது பாதுகாப்புக்கான பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து அங்கிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் அவரவரின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள பயணிகளால் தங்களது நாட்டிற்கு பாதிப்பு வந்துவிடும், எனவே அவர்களை அனுமதிப்பது ஆபத்து என்று கியூபா நாட்டின் அரசு கருதவில்லை. கப்பலில் இருப்பவர்கள் மனிதர்கள், அவர்களின் உயிர் முக்கியமானது; ஒரு உயிர் கூடப் பறிபோய் விடக்கூடாது; மற்றவர்களுக்கும் தொற்றி விடக்கூடாது என்று முடிவெடுத்தது கியூப அரசு.

உலகின் வேறு சில பகுதிகளிலும் நடுக்கடலில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற எண்ணத்தில் சில பயணிகள் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக வெளியாகி வந்தன. இந்நிலையில், கொரோனா பாதிப்பு உள்ளது என்று தெரிந்தும் அந்த மனிதர்களைக் காப்பாற்றுவதே தலையாய கடமை என்ற மாபெரும் மனிதநேயத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளது கியூபா.

banner

Related Stories

Related Stories