சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் காட்டுத்தீ போன்று பரவி வருகிறது. ஆட்கொல்லி வைரஸாக உள்ளதால் மக்கள் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். சீனாவை அடுத்து இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நோய்த் தொற்றால் உலகின் பல்வேறு விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. மேலும், சர்வதேச அளவில் பொருளாதாரமும் மந்த நிலையை சந்தித்து வருகிறது. கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து தாய் நாட்டுக்குத் திரும்புபவர்களாலும் மற்ற நாடுகளில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் போதிய வசதிகளும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில், பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியனோ ரொனால்டோ போர்ச்சுகல் நாட்டில் தனக்கு சொந்தமான ஒரு ஹோட்டலை கொரோனா பாதித்தவர்களுக்காக மருத்துவமனையாக மாற்ற முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது.
அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும், அவர்களுக்கான சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவ பணியாளர்களுக்கான ஊதியத்தை தான் தருவதாகவும் ரொனால்டோ கூறியுள்ளதாக செய்திகள் சமூக வலைதளங்களில் பரவின.
இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு ரொனால்டோவின் செயலுக்கு பாராட்டும் தெரிவித்து வந்தனர்.
ரொனால்டோவின் ஹோட்டல் நிர்வாகத்திடம் BoomLive செய்தி நிறுவனம் விசாரித்ததில், ஹோட்டல் நிர்வாகத்தினர் இந்தத் தகவலுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொடர்பான பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் அந்த வைரஸை விட அதிவேகமாக பரவி வருகிறது.
ஆகவே, சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை ஒன்றுக்கு இருமுறை உண்மையை அறிந்த பிறகு பகிர வேண்டும். அவ்வாறு உண்மைதன்மை அறியமுடியாவிடில் அதனை பகிராமல் தவிர்த்துக்கொள்வதே நலம் பயக்கும்.