மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நாளுக்கு நாள் சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வலுத்து வருகிறது. டெல்லியில் இந்த சட்டத்துக்கு எதிராக போராடிய இஸ்லாமிய மக்கள் மீது இந்துத்வ கும்பல் கண்மூடித்தனமாக வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளது.
இந்த வன்முறையால் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். வடகிழக்கு டெல்லி பகுதி முழுவதும் சூறையாடப்பட்டு மயானமாக காட்சியளிக்கிறது. மக்கள் வாழ்வாதாரம் இன்றித் தவித்து வருகின்றனர்.
ஆனால், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.கவினரை கைது செய்யாமல், வழக்குப்பதிவு செய்யாமல் அப்பாவி மக்கள் மீது டெல்லி போலிஸ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து வருவதற்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இஸ்லாமிய மக்களின் சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டத்துக்கு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் நடக்கும் போராட்டத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த ஐவர் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனையறிந்த மத்திய அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை இந்தியாவை விட்டு வெளியேறும்படி கூறியுள்ளது.
இதுதொடர்பாக மக்களவையில் நேற்று நடந்த கூட்டத் தொடரின் போது பேசியுள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய், சென்னை ஐ.ஐ.டியில் படிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த ஜேக்கப், கொச்சியில் படிக்கும் நார்வேயைச் சேர்ந்த ஜேன் மேட் ஜான்சன் உள்ளிட்ட ஐவரும் சி.ஏ.ஏவுக்கு எதிராகப் போராடி விசா விதிகளை மீறியுள்ளனர். ஆகையால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.