இந்து ராஷ்டிராவை உருவாக்குவதற்காக மோடி அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக குடியுரிமை சட்டத்தில் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை கொண்டு வந்தது. இதற்கு நாடு முழுவதும் கடுமையாக எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
வடகிழக்கு மாநிலங்களால அசாம், திரிபுராவில் தொடங்கிய சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் கடைக்கோடியில் உள்ள மக்கள் வரை சென்றிருக்கிறது. தலைநகர் டெல்லியில் உள்ள ஷாஹீன்பாக் பகுதியில் இஸ்லாமிய பெண்கள் கடந்த டிசம்பர் மாதம் முதல் இரவு பகல் பாராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் வடகிழக்கு டெல்லியின் கோகுல்புரி, சீலம்பூர், மவுஜ்பூர் என பல பகுதிகளில் சி.ஏ.ஏவுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் இறங்கினர்.
அந்த சமயத்தில் சி.ஏ.ஏ ஆதரவு பேரணியில் பா.ஜ.கவின் கபில் மிஸ்ரா இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதை அடுத்து அந்த பகுதிகளில் கடந்த இரு நாட்களாக வன்முறை வெறியாட்டத்தை நடத்தி வருகிறார்கள் இந்துத்வ குண்டர்கள்.
இதனால், இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியும், நூற்றுக்கணக்கானோர் படுகாயமுற்றும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வடகிழக்கு டெல்லி முழுவதும் தீக்கிரையாகி காட்சியளிக்கிறது. இந்நிலையில், ஷாஹீன்பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என பா.ஜ.கவைச் சேர்ந்த நந்த் கிஷோர் கார்க்கும், ஷாஹீன்பாக்கில் நடக்கும் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி டெல்லியைச் சேர்ந்த அமித்ஷானியும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல், “கே.எம்.ஜோசப் ஆகியோர் டெல்லியில் தற்போது மிகவும் இக்கட்டான சூழல் நிலவுகிறது.
இந்த சமயத்தில் இந்த வழக்கை விசாரிப்பது நன்றாக இருக்காது. ஆகையால் வழக்கை ஹோலி விடுமுறைக்குப் பின் விசாரிப்பதாகக் கூறி மார்ச் 23ம் தேதி ஷாஹீன்பாக் தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர்.
அதேசமயத்தில், டெல்லியில் நடந்த வன்முறைகளை கட்டுப்படுத்தாமல் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கு காவல்துறையின் மெத்தனமே காரணம் என்றும், கலவரத்தை தூண்டும் வகையில் அரசியல் கட்சி பிரமுகர் பேசியபோதே உரிய நடவடிக்கையை காவல்துறை எடுத்திருக்க வேண்டும் என கபில் மிஸ்ரா பேசியதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். இங்கிலாந்து, அமெரிக்கா போன்று எவருடைய உத்தரவுக்கும் காத்திருக்காமல் டெல்லி காவல்துறை செயல்பட்டிருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் காட்டமாக கூறியுள்ளனர்.