குடியுரிமை திருத்தச் சட்டம் , என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியின் ஷாகீன் பாக் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இஸ்லாமிய பெண்கள் குடும்பம், குடும்பமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு பகல், வெயில், குளிர் என எதையும் பொருட்படுத்தாமல் இந்தியர் என்ற உரிமையை நிலைநாட்ட தொடர்ந்து போராடி வருகின்றனர். இஸ்லாமியர்களின் இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு கிடைத்த வண்ணம் உள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பா.ஜ.க அரசு இயற்றியுள்ள இந்த சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு டெல்லியில் உள்ள ஜஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே பெண்கள் திடீரென கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
1000க்கும் மேலான பெண்கள், குழந்தைகள் பங்கேற்றுள்ள இந்த போராட்டம் 12 மணிநேரத்தையும் கடந்து நீடித்து வருகிறது. மத்திய மோடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.
திடீரென போராட்டத்தை தொடங்கியதால், இது டெல்லி முழுவதும் பரவி விடக்கூடாது என்ற நோக்கில் மெட்ரோ ரயில் நிலையங்களை மூடியதோடு, அப்பகுதியில் ஆயிரணக்கணக்கான துணை ராணுவப்படையில் மற்றும் போலிஸாரை குவித்திருக்கிறது மத்திய அரசு.
உரிமையை தக்கவைத்துக் கொள்ள போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது மோடி அரசு ஒடுக்குமுறையை கடைபிடிக்கும் வகையில் பாதுகாப்பு படையினரை குவித்துள்ளதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், டெல்லி பதற்றம் நிலவி வருகிறது.