குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பா.ஜ.கவினரின் அட்டகாசங்களும், அராஜக போக்கும் கூடவே நடந்தேறி வருகின்றன.
அவ்வகையில், நேற்று சென்னையில் இஸ்லாமியர்கள் மாபெரும் பேரணியாகத் திரண்டு போராட்டம் நடத்தி வந்தபோது, குடியுரிமை சட்டத் திருத்தத்தால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்து, அதனை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசாக தருவதாக பா.ஜ.க.வினர் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டி விளம்பரப்படுத்தியுள்ளனர்.
பா.ஜ.கவின் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவைச்சேர்ந்த வழக்கறிஞர் கே.தங்கவேல் பெயரில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள தங்கவேலுவின் செல்போன் எண்ணுக்கு வெல்ஃபேர் கட்சியின் மாநில செயலாளர் முகமது கவுஸ் என்பவர் தொடர்புகொண்டு குடியுரிமை சட்டத்தால் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது எனக் கூறியிருக்கிறார்.
இதனைக் கேட்ட பா.ஜ.கவின் தங்கவேல், அதற்கான ஆவணங்களை வாட்ஸ்-அப்பில் அனுப்புமாறு கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்திருக்கிறார். இதையடுத்து, நேரிலேயே வந்து ஆதாரங்களை தர தயாராக இருக்கிறேன். எங்கு எப்போது வரவேண்டும் எனச் சொல்லுங்கள் என முகமது கவுஸ் கேட்டிருக்கிறார்.
அதற்கு, ஆவணங்களை வாட்ஸ்-அப்பில் அனுப்புங்கள் அதனைச் சரிபார்த்துவிட்டு பரிசீலனை செய்கிறேன் என அதே கூற்றை தங்கவேல் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார்.
இருப்பினும், சற்று அழுத்தமாக முகமது கவுஸ் கேட்க, வேண்டுமென்றால் அனுப்புங்கள் எனக் கூறி சமாளித்த தங்கவேல் இணைப்பைத் துண்டித்துவிட்டு ஓட்டம் பிடித்திருக்கிறார்.
உரிமையை நிலைநாட்ட இரவு பகல் பாராமல் மக்கள் போராடி வரும்போது, சுய விளம்பரத்துக்காக இவ்வாறு போஸ்டர் ஒட்டி, வம்பாக எதையாவது பேசி அவ்வப்போது அசிங்கப்பட்டு வருவதையே பா.ஜ.கவினர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.