குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தக் கூடாது என்றும், சிஏஏ, என்.ஆர்.சிக்கு எதிராக சட்டமன்றத்தில் எடப்பாடி அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் இஸ்லாமியர்கள் 4வது நாளாக தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
பிப்ரவரி 14ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தில் போலிஸார் நடத்திய வன்முறை வெறியாட்டம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி மாநில அளவில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட வித்திட்டுள்ளது.
இரவு, பகல் பாராமல் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் வண்ணாரப்பேட்டை பகுதியில் குவிந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே ஜனநாயக ரீதியில் போராடி வரும் மக்களைக் கலைக்க எடப்பாடி அரசு தனது காவல்துறையுடன் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும், போராட்டக்காரர்கள் எதையும் எதிர்கொள்ளும் மனநிலையோடு தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டு மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தி தனது பாசிசத்தை புகுத்த நினைக்கும் மத்திய பா.ஜ.க அரசின் ஒவ்வொரு செயலுக்கும் சம்மட்டி அடி கொடுக்கும் வகையில், இந்தியா எப்போதும் மதச்சார்பற்ற நாடாகவே திகழும் என மக்கள் நிரூபித்து வருகின்றனர்.
அவ்வகையில், சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய மக்களுக்காக இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் உணவு சமைத்து கொடுத்து அவர்களுக்கு விநியோகிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், இஸ்லாமிய மக்களுக்காக இந்து மக்கள் துணை நிற்பது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புகைப்படங்கள் பின்வருவன,