தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் யாரை வேண்டுமானாலும் தடுப்புக் காவல் மையத்தில் வைக்க மத்திய அரசு டெல்லி காவல்துறைக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
மோடியின் பா.ஜ.க அரசு இயற்றியுள்ள குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் தலைநகரான டெல்லியில் ஜாமியா, ஜே.என்.யூ உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக தனது மதவாத கும்பலை ஏவி அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையை கட்டவிழ்த்து விட்டது பா.ஜ.க அரசு. ஆனால் மாணவர்கள் தங்களுக்கு நேர்ந்த அடக்குமுறையை மீறி மீண்டும் உரிமைக்காக போராட்டக்களத்தில் இறங்கி போராடி வருகின்றனர்.
இருப்பினும், போராட்டத்தை எப்படியாவது வலுவிழக்கச் செய்துவிட வேண்டும் என்பதற்காக புதிதாக ஒரு உத்தியை கையாண்டுள்ளது பா.ஜ.க அரசு. என்னவெனில், டெல்லி காவல்துறை ஆணையருக்கு அம்மாநில துணை நிலை ஆளுநர் விடுத்துள்ள அறிக்கையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் யாரை வேண்டுமானாலும் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் நாளை முதல் (ஜனவரி 19) ஏப்ரல் 18 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் பதிவில், ஏன் சகிப்புத்தன்மையின்றி மத்திய பா.ஜ.க அரசு செயல்படுகிறது என்றும், அரசுக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள மத்திய அரசு அஞ்சுகிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.