பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிர்ப்பு தெரிவித்து 15 நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பெரும் போராட்டத் தீயே கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.
இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள இந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என ஒவ்வொருவரும் அற வழியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக மத்திய பா.ஜ.க அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து காவல்துறையை ஏவி போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.
இதற்கும் தேசிய அளவில் எதிர்ப்பு எழுந்து வருகிறது. பல்வேறு மாணவர்கள் காயமடைந்தும், அப்பாவி பொதுமக்கள் உயிரை காவு வாங்கியும் வருகிறது மத்திய பா.ஜ.க அரசு. தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட எழுச்சிப் பேரணி நடத்தப்பட்டது. அதன் பிறகும் பல இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற மக்களவைக் குழு துணைத் தலைவருமான கனிமொழியின் பிறந்தநாள் ஜனவரி 5ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கனிமொழி, அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக் கணக்கானோர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேளையில் எனது பிறந்தநாளை கொண்டாடத் தேவையில்லை என நினைக்கிறேன்.
‘அநீதி வீடும், அறம் வெல்லும்’ என்ற தலைவர் கலைஞர் அவர்களின் வார்த்தைகளை நெஞ்சில் நிறுத்தி, தலைவர் தளபதியின் வழிகாட்டுதலோடு ஜனநாயகம் காக்க தொடர்ந்து போராடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.