குடியுரிமை சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக அரசு மேற்கொண்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தி.மு.க. தலைமையில் மாபெரும் கண்டன பேரணி இன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதை எப்படியாவது தடுத்து நிறுத்த அடிமை அ.தி.மு.க செய்த தகிடுதத்தங்களைப் பொய்யாக்கி பேரணி திட்டமிட்டபடி இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.
இந்தப் பேரணியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, வி.சி.க தலைவர் திருமாவளவன், தி.மு.க மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதிமாறன், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல், மாணவர்கள், வணிகர் சங்கத்தினர், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் தி.மு.கவின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்று பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகளுக்கு தங்களுடையை எதிர்ப்புகளை முழக்கமிட்டு தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க. பேரணி நடைபெற்று வருவதையொட்டி, ட்விட்டரில் #DMKRally #DMKagainstCAA மற்றும் #DMKProtest ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் முன்னிலையில் உள்ளது. மேலும், மதங்களை கடந்த மாநிலத்தின் பல்வேறு பகுதில் இருந்து வந்து தி.மு.க.,வின் மதச்சார்பற்ற பேரணியில் பங்கேற்றுள்ளனர்.