உலகம்

ஐ.நா-வில் இஸ்ரேலுக்கு எதிரான ஒருங்கிணைந்த நாடுகள்... எனினும் தனியாக தீர்மானத்தை தடுத்த அமெரிக்கா !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது.

மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,பல லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேறியுள்ளனர்.

மேலும் காசா பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்து,கடந்த சில நாட்களுக்கு முன்னர் காசா நகரின் மீது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. மேலும் காசாவில் இருப்பவர்கள் அதன் தென்பகுதிக்கு செல்லுமாறும் இஸ்ரேல் அறிவித்தது. இஸ்ரேலின் தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே சர்வதேச மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் சார்பில் சுதந்திரமான மனித உரிமை ஆணையக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கையில், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலை என வரையறுக்கப்பட்ட 5 செயல்களில் 4 காசாவில் நடந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த கவுன்சிலில், 14 உறுப்பினர்கள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனினும் இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை கொண்டு நிறைவேற்றவிடாமல் தடுத்தது. இதனால் இந்த தீர்மானம் தோல்வியைத் தழுவியுள்ளது.

Also Read: ரோபோ சங்கர் மறைவு : நேரில் சென்று அஞ்சலி செலுத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!