உலகம்

"மோசமான நினைவாற்றலால் பாதிக்கப்பட்டுள்ளார்" - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறித்து வெளியான அறிக்கை !

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வருகிறது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.

அதன் உச்சமாக அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை முறைகேடாகக் கையாண்டதாக அதிபர் ஜோ பைடன் மீது குற்றம்சாட்டப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்த விசாரணையின் அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில், 81 வயதான ஜோ பைடன் மோசமான நினைவாற்றல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் ஒபாமா அரசில் எந்த காலகட்டத்தில் துணை அதிபராக இருந்தார், அவரது மகன் விபத்தில் உயிரிழந்தது எப்போது போன்ற முக்கியமான விவரங்கள் கூட அவர் நினைவில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரம் அரசின் ரகசிய ஆவணங்களை முறைகேடாகக் கையாண்டாலும், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை தேவையில்லை என அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது. இதனால் பைடன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டாலும் அவர் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதால் இந்த அறிக்கை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த அறிக்கை குறித்த விவரங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பைடனுக்கான ஆதரவை கடுமையாக குறைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: "இந்தாண்டு IPL தொடரில் ரிஷப் பண்ட் கட்டாயம் விளையாடுவார்" - பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உறுதி !