உலகம்
சிறையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு விஷம்.. மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு !
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்தன. பல்வேறு எதிர்புகளுக்கு மத்தியில் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் பதவி விலகி எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. தற்போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் பிரதமராக இருந்து வருகிறார். அவரின் அரசுக்கு பெரிய கட்சிகளில் ஒன்றான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளித்து வருகிறது.
இம்ரான் கானுக்கு எதிராகவும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. அதில் 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அவர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டபோது வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், விலையுயர்ந்த பொருட்களை விற்று கிடைத்த பணத்தை மோசடி செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் அந்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்று உறுதி செய்த நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளது.அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த தண்டனை காரணமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தேர்தலிலும் போட்டியிட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறையில் இம்ரான் கானுக்கு விஷம் கொடுக்க வாய்ப்புள்ளது என அவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதிய இம்ரான்கானின் மனைவி புஷ்ரா பீபி, அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது கணவரின் உயிருக்கு ஆபத்துள்ளது. சிறையில் அவருக்கு விஷம் கொடுக்க வாய்ப்புள்ளதால், அவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இம்ரான் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பதால் அவரது சமூக மற்றும் அரசியல் அந்தஸ்துக்கு ஏற்ப சிறையில் பி-கிளாஸ் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், அட்டாக் சிறையில் இதுபோன்ற வசதிகள் இல்லாததால் சிறைச்சாலையை மாற்ற கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ளார்.
அதோடு, முன்னாள் பிரதமர் என்பதால், அவருக்கு வீட்டில் சமைக்கும் உணவை சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்றும், அவரை கொல்ல ஏற்கனவே இரண்டு முறை முயற்சிகள் நடந்து, அச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை" என்றும் கூறியுள்ளார்.
Also Read
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
மும்பையில் நடைபெறும் ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025!’ : தமிழ்நாடு அரசு பங்கேற்பு! - முழு விவரம் உள்ளே!
-
குளத்தில் குதித்த காதலன் : காப்பாற்ற முயன்ற காதலி - நடந்தது என்ன?
-
ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.5 லட்சம் கிடைக்கும் : பொதுமக்களிடம் பண மோசடி - அ.தி.மு.க நிர்வாகிகள் கைது!