உலகம்

“ரூ.33 லட்சம் கொடுத்தா தான் என் பொண்ணை கொடுப்பேன்” - வரதட்சணை கேட்ட மாமியார் மீது மணமகன் புகார்: நடந்தது?

சீனாவின் கன்சு மாகாணத்திலுள்ள (Gansu Province) ஜென்யுவான் கவுன்ட்டியில் (Zhenyuan County) வசித்து வரும் லியு என்ற குடும்ப பெயர் கொண்ட இளைஞர், இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வரவே, இருவீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற தொடங்கியுள்ளது. அப்போது பெண்ணின் தாயார், தனது மகளை கட்டி கொடுக்க வேண்டுமென்றால் வரதட்சணையாக ¥.2,88,000 (இந்திய மதிப்பில் ரூ.33 லட்சம்) பணம் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன், தனது காதலியின் தாயிடம் தங்கள் நிலையை விளக்கியுள்ளார். ஆனால் அதற்கு எதற்கும் மசியாத பெண்ணின் தாயார், பணத்தை கொடுத்தால் தான் பெண் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் வேறு வழியின்றி அந்த இளைஞரும் தனது காதலியின் தாய் மீது ஜென்யுவான் கவுன்ட்டியின் (Zhenyuan County) மேயரிடம் வலைதள பக்கம் வாயிலாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், "எனது காதலியின் தாயார், உள்ளூர் மணமகளின் விலை 288,000 யுவான் என்று கூறி என்னிடம் வரதட்சணை கேட்கிறார். அதுவும் பிளாட் மற்றும் கார் உள்ளிட்டவை அதனுள் அடங்காது. எங்கள் பகுதியில் மணமகளின் விலை சுமார் 120,000 யுவான் மட்டுமே. நாங்கள் ஒருவரையொருவர் விரும்புவதால், எனது குடும்பத்தால் இவ்வளவு அதிக மணமகள் விலையை வாங்க முடியாது என்று கூற எனக்கு தைரியம் இல்லை. எனவே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 15-ம் தேதி இவர் அளித்த புகாருக்கு உள்ளூர் அரசு நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதில், "கவுன்ட்டியில் மணமகளின் விலை குறைந்தவண்ணம் இருக்கிறது. இனிவரும் காலங்களில் அதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாமியார் வரதட்சணை கேட்பதாக மருமகன் அளித்த புகாருக்கு பலரும் பலவித கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

சீனாவில் பெண்ணை கட்டிக்கொடுக்க வேண்டும் என்றால், மணமகன் வரதட்சணை கொடுக்க வேண்டும். வரதட்சணை கொடுக்கல் வாங்கல் அந்நாட்டில் சட்டப்படி பிரச்னை இல்லை. ஒவ்வொரு பகுதியிலும் மணமகளுக்கு என்று தனி விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதன்படி பணம் கொடுத்து திருமணம் செய்துகொள்கின்றனர் மணமகன்கள் என்பது கூடுதல் தகவல்.

Also Read: நாட்டை விட பணம் தான் பெரியதா ? முதலில் நாட்டுக்கு முக்கியம் கொடுங்க.. -BCCI-யை விமர்சிக்கும் ரசிகர்கள் !