உலகம்

ரஷ்யாவில் தரையிறங்கிய Air India விமானம்.. அறிக்கை வெளியிட்டு பதறிய அமெரிக்கா.. காரணம் என்ன ?

தலைநகர் டெல்லியில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான AI-173 என்ற விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 216 பயணிகள் மற்றும் 16 விமான சிப்பந்திகளுடன் அமெரிக்க நகரான சான் ப்ரான்சிஸ்கோவிற்கு சென்றுக்கொண்டிருந்தது.

இந்த விமானம் ரஷ்யா எல்லைக்கு அருகில் சென்றபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமானத்தின் பைலட் விமானத்தை அவசரமாக தரையிறக்க ரஷ்யா அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளார். அதன்படி விமானத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விமானம் ரஷ்யாவில் தரையிறங்கியுள்ளது.

ஆனால், இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அமெரிக்காவுக்கு சென்ற அந்த விமானத்தில் ஏராளமான அமெரிக்கர்கள் இருக்கலாம் என்பதால் அது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதால் அமெரிக்கா இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் இது குறித்து கூறுகையில், "அமெரிக்காவுக்கு பயணித்த ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டதை அறிந்து அதை கவனித்து வருகிறோம். அந்த விமானத்தில் அமெரிக்கர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது இன்னும் உறுதியாகவில்லை எனினும் அமெரிக்காவுக்கான விமானம் என்றால் நிச்சயமாக அமெரிக்கர்கள் இருக்க வாய்ப்புள்ளது. அடுத்தடுத்த நகர்வுகளைக் கவனித்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை பாதுகாப்பாக அமெரிக்கா கொண்டுசெல்ல மற்றொரு விமானம் அனுப்பப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அமெரிக்காவின் அறிக்கை குறித்து ரஷ்யா தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: ரயில் விபத்தால் நாடே அதிர்ந்தபோது குளு குளு வாசத்தில் அரசியல் நடத்திய ஆளுநர் -சிலந்தி கட்டுரை விமர்சனம் !