உலகம்

11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்த பிரபல நிறுவனம்.. பணியாளர்களின் நிலை என்ன?

உலகம் முழுவதும் ஐ.டி நிறுவனங்களில் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல்வேறு நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதன் தாக்கம் சிறிய நிறுவனங்கள் மட்டுமல்லாது முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களாகக் கருதப்படும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களையும் பாதித்துள்ளது.

அதன் வெளிப்பாடுதான் ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் முடிவுக்கு தள்ளியுள்ளது. ஃபேஸ்புக் தங்களது ஊழியர்களை 11000 பேரை நீக்குவதாக அறிவித்தது. ட்விட்டர் தங்களது ஊழியர்களின் 50%க்கும் அதிகமானவர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனமும் தங்கள் 5% பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.

இதனிடையே உலகளவில் பிரபலமான அமேசான் தனது பணியாளர்களில் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இதில் இந்தியாவை சேர்ந்த 500 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இணைய சேவைகள், மனித வளம் போன்ற பிரிவுகளில் பணியாற்றிய பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது தவிர வோடஃபோன் நிறுவனம் அடுத்து வரும் 3 ஆண்டுகளில் உலகளவில் சுமார் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. வோடஃபோன் நிறுவனப் பங்குகளின் விலை, 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதால், நிர்வாகத்தை மறுகட்டமைப்பு செய்ய இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக வோடஃபோன் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான மார்கரிட்டா தெரிவித்துள்ளார்.

Also Read: மீண்டும் சரியத் தொடங்கிய அதானி நிறுவன பங்குகள்.. ஒரே நாளில் 5% வரை சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் அச்சம்!