உலகம்

ஆளும் கட்சியால் உடைக்கப்பட்ட உச்சநீதிமன்ற கேட்: தலைமை நீதிபதிக்கு எதிராக தீர்மானம்- பரபரப்பில் பாகிஸ்தான்

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த எஅண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்தன. பல்வேறு எதிர்புகளுக்கு மத்தியில் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் பதிவி விலகி எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. தற்போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் பிரதமராக இருந்து வருகிறார். அவரின் அரசுக்கு பெரிய கட்சிகளில் ஒன்றான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளித்து வருகிறது.

இம்ரான் கானுக்கு எதிராகவும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. மேலும் அவரை எம்.பி. பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த பேரணியில் திடீரென மர்ம நபர்கள் சிலர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தனது பதவிக்காலத்தில் வெளிநாட்டு பிரமுகர்கள் வழங்கிய பரிசுகளை சட்டவிரோதமாக விற்றதாக குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் ஆஜராகாத நிலையில் அவருக்கு மாவட்ட நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்தது.

அதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என கூறப்பட்டது. இந்த நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார் என கூறப்பட்டிருந்தது. அதன்படி நீதிமன்றம் வந்த இம்ரான் கானை சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதனை தடுக்க முயன்ற இம்ரான் கானின் வழக்கறிஞர்களும் தாக்கப்பட்டுள்ளனர். இந்த கைதைத் தொடர்ந்து பெரும் கலவரம் மூண்ட நிலையில், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அநாவசியமாக இம்ரான்கானை கைது செய்ததாக ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு கண்டனமும் தெரிவித்தது.

இந்த நிலையில், நீதித்துறை இம்ரானுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி பாகிஸ்தான் ஆளும் கட்சி உட்பட அதன் 13 கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. போராட்டக்காரர்கள் உச்ச நீதிமன்ற வளாகப் பகுதிக்குள் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உமர் அடா பண்டியாலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் இம்ரானுக்கு ஆதரவாக தலைமை நீதிபதி செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: கர்நாடகாவில் 30 தொகுதியில் டெபாசிட் இழந்த பாஜக.. 10 தொகுதிகளில் 2 முதல் 5% வாக்குகளை பெற்று படுதோல்வி !